பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற புதிய கட்டுப்பாடு

  • 19 டிசம்பர் 2016

ஐந்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30 ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதுவும், அவ்வாறு பணம் செலுத்துவோரிடம் இரண்டு வங்கி ஊழியர்களின் முன்னிலையில், இந்த தொகையை இதற்கு முன்னால் ஏன் வங்கியில் செலுத்தவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, விளக்கங்கள் திருப்தியளித்தால் அந்தத் தொகை வங்கிக் கணக்கில் ஏற்கப்படும்.

பின்னர், இது தொடர்பாக கணக்குத் தணிக்கை விசாரணைக்காக வழங்குவதற்காக வாடிக்கையாளர் வழங்கும் விளக்கங்களும் ஆவணப்படுத்தப்படும்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக வங்கியில் செலுத்தப்பட்டாலும், அவற்றின் கூட்டுத் தொகை ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வந்தால், மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படும். டிசம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 5 ஆயிரத்திற்கு மிகாத தொகையை மட்டுமே செலுத்த முடியும்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற கேஒய்சி (வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை அறிவிக்கும் விண்ணப்பம்) படிவத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின்னர், அந்தப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமரின் ஏழைகளுக்கான நலவாழ்வு திட்டம் 2016-இல் இடப்படுகின்ற தொகைக்கு இந்த நிபந்தனைகள் பொருந்தாது.

இந்த மதிப்பிலான தொகை சேமிப்பவரின் எந்த வங்கிக்கணக்கிலும் இடப்படலாம்.

அதேபோல, மூன்றாவது நபரின் வங்கிக்கணக்கிலும் இதே அளவு தொகை வங்கியின் வரையறைகளை பூர்த்தி செய்து இடப்படலாம். எந்த நபருக்காக பணம் டெபாசிட் செய்யப்படுகிறதோ அவரிடமிருந்து ஒரு கடிதத்தை பணம் செலுத்துபவர் பெற்றுவர வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்