'தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரி சோதனை மாநிலத்திற்கே தலைகுனிவு'

  • 22 டிசம்பர் 2016

நேற்று (புதன்கிழமை) தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவின் இல்லம், மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் குறித்து தமிழக அரசியல் கட்சியினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து படிக்க: தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை

Image caption தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இந்த வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

''இந்நிலையில் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது மாலத்திற்கே தலைகுனிவு'' என்று மு.க. ஸ்டாலின் மேலும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரித்துறை சோதனை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''வருமானவரித்துறை சோதனைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து பலநூறு கோடி பணமும், தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

Image caption முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ராம மோகன ராவ் ( கோப்புப் படம்)

'தமிழக மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது'

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை குறித்து படிக்க:தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மேலும், அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோ எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. என்றாவது ஒருநாள் இப்படியெல்லாம் நடக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான்'' என்று கூறியுள்ளார்.

''ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணியில் உள்ள தலைமைச் செயலர் வீட்டில் முதன்முறையாக சோதனை நடத்தப்படுவதும், இத்தகைய ஊழல்வாதி தான் கடந்த 6 மாதங்களாக ஊழலை ஒழிப்பதற்கான தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராக பணியாற்றி வந்தார் என்பதும் தான் தமிழகத்தின் குடிமகன் என்ற முறையில் வேதனை அளிக்கிறது. இந்த சோதனைகளால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது'' என்று ராமதாஸ் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Image caption தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை

'ஊழலை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்'

வருமான வரித்துறை சோதனை குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும். தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தி இருப்பது, தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத நடவடிக்கை ஆகும்.

தலைமைச் செயலாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் புதிய 2000 ரூபாய் தாள்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீடுகளிலும். அலுவலகங்களிலும் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 33 கோடி ரூபாய் அளவுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வைகோ குறிப்பிடுகையில்,''அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலில் ஈடுபட்ட எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோடி கோடியாக குவிக்கப்பட்ட பணமும், கிலோ கணக்கில் வாங்கிக் குவிக்கப்பட்ட தங்கக் கட்டிகளும், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களும் ஊழலின் பிரம்மாண்ட அளவை பிரதிபலிக்கின்றன. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ள வைகோ ''தமிழக அரசின் தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்து, சட்டபூர்வமான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் புரையோடிப்போய் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்