சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்களை பதவி நீக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MKStalin
Image caption துணைவேந்தர்களுக்கு அரசியல் சாயமா?

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அளித்துள்ள கடிதத்தில்,

பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியை அறிந்து தான் வேதனை அடைந்ததாகவும், உயர்கல்வியின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் மாண்பையும், கண்ணியத்தையும் உண்மையான உணர்வோடு காக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயர்கல்வியினை முன்னெடுத்துச் செல்லும் கல்வியாளர்கள் மாநிலத்தின் அரசு பொறுப்பில் இல்லாத நபர் ஒருவரை சந்திப்பது தேவையற்ற, நெறிமுறைகளை மீறிய, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

துணை வேந்தர்களின் இந்த செயல்கள் அவர்களுடைய விசுவாசம் மாநிலத்தின் கல்வியின் தரத்திற்கோ அல்லது பல்கலைக்கழக வேந்தருக்கானதோ அல்ல என்பது நிரூபணம் ஆகிறது என்றும், அதே நாளிதழில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சமீபத்தில் ஓய்வுப் பெற்ற துணைவேந்தர், "துணைவேந்தர்கள் ஆளுங்கட்சிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்", என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் இழிவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என சில துணை வேந்தர்கள் கூறினாலும், இந்த சந்திப்பின் உண்மையான நோக்கங்கள் பற்றி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர்.நமது எம்.ஜி.ஆரில் தெளிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், அந்த நாளிதழ், துணை வேந்தர்கள் சசிகலாவை சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வருக்கு பதிலாக சசிகலாவை தலைமை ஏற்க அழைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் துணைவேந்தர்கள் தங்களுடைய நியமனம், நடத்தை மற்றும் விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என்றும், எனவே, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் 'உயர்கல்வியின் தரத்தை' பாதுகாக்கும் வகையில் அந்த துணைவேந்தர் களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்வதோடு, துணைவேந்தர் பதவிகளை அரசியலாக்கி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி நிலையின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை தடுக்குமாறும் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்றாமையில் ஸ்டாலின்

ஸ்டாலின் அறிக்கை குறித்து பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன், ஸ்டாலினின் அறிக்கை காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். போஸ் கார்டனில் அமரர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சியினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் நாள்தோறும் வருகின்றனர். அங்கு சசிகலா இருக்கிறார். பல்கலைகழகங்களில் துணைவேந்தர்கள் அஞ்சலி செலுத்த அங்கு வந்தனர். அதில் என்ன தவறு? இரங்கல் செலுத்துவதில் அரசியல் செய்யக்கூடாது. இந்த அறிக்கையை ஸ்டாலின் விடுத்திருப்பது ஆற்றாமையைக் காட்டுகிறது,'' என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்