இந்தியா - பாகிஸ்தான் நதிநீர் பங்கீட்டில் அதிகரிக்கும் பதற்றம் - பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தலையிடுமா?

படத்தின் காப்புரிமை Reuters

சிந்து படுகையின் மேற்கு நதிகளிலிருந்து அதிகபட்சமான நீரை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா அதிகப்படுத்தி வருகிறது என மூத்த அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

அந்த நடவடிக்கையில் ஒரு பங்காக பெரிய நீர் சேமிப்பு வசதிகளும் கால்வாய்களும் கட்டப்படும்.

மூன்று ஆறுகள் இந்திய நிர்வாகத்திற்குள்ளான காஷ்மீரின் வழியாக பாய்கின்றன. ஆனால் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றின் படி அதில் அதிகப்படியான நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

காஷ்மீர் குறித்த சர்சையில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்த நீர் பிரச்சனையை இந்தியா பயன்படுத்துகிறது என இந்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவு மோசமடைந்து வருகிறது; ஆனால் பாகிஸ்தான் அந்த தாக்குதலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்து வருகிறது.

நீர் திட்டத்தின் தகவல்களை இறுதிப்படுத்தும் முயற்சிகளில் அரசு அதிரடிப்படையினர் ஈடுபட்டுவருவதாகவும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

"முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் முடிவிற்காக காத்திருப்போம் என்றும், அது சிந்து படுகையில் புதிய சேகரிப்பு கட்டமைப்பை அமைப்பதாகத்தான் இருக்கும்" என அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அந்த நிலப்பரப்பில் ஏற்கெனவே பல கட்டமானங்களை அமைத்ததால் அது தங்களுக்கு பழக்கப்பட்டதுதான்" என மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில வருடங்களை பற்றிதான் தாங்கள் பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வளவு நீர் பங்கிடப்பட்டுள்ளது?

சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை "அதிகபட்சமாக" பயன்படுத்த இந்தியா விரும்புகிறது. அந்த நதிகளின் நீரை நம்பித்தான் இரண்டு நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர்.

"இந்த நடவடிக்கை சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு உட்பட்டது தான்" என்பதை வலியுறுத்தினார் இந்திய நீர் வளங்கள் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 19 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் அதனையடுத்து இந்தியா அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யத் தொடங்கியது

இந்தத் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியது. மேலும் இரு நாடுகளுக்கும் உள்ள உறவு மோசமடைந்து எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தானது; அதன்படி ரவி, பீஸ் மற்றும் சட்லஜ் ஆகிய சிந்து படுகையின் கிழக்கு பகுதி நதிகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டது மேலும் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.

மூன்று மேற்கத்திய நதிகளிலிருந்து தங்களுக்கு வழங்கப்படும் நீரில் 20 சதவீத நீரை தாங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என இந்தியா தெரிவிக்கிறது. ஆனால் இது குறித்து பாகிஸ்தான் சர்ச்சையை கிளப்புகிறது.

சிந்து நதி ஒப்பந்தத்தின் படி இந்தியா 1.4 மில்லியன் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது 800,000 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.

நீர் மின் திட்டங்களுக்கான கட்டடங்களும் தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தற்போது மேற்கு நதிகளிலிருந்து 3,000 மெகாவாட் நீர் மின்சக்தியை இயக்குகிறது; ஆனால் சிந்து படுகையில் சுமார் 19,000 மெகாவாட் வரை மின்சாரம் எடுக்கும் திறன் உள்ளது.

படத்தின் காப்புரிமை European Photopress Agency

நீர் ஒப்ந்தம் எந்தளவு பாதுகாப்பானது?

இந்தியாவின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கூர்ந்து கவனித்து வருகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் "நீர், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற பொது விவாதம் ஒன்றில் பேசிய ஐ.நாவிற்கான பாகிஸ்தான் தூதர் மெலீஹா லோதி, "அச்சுறுத்தல் மற்றும் போருக்கான ஆயுதமாக நீரைப் பயன்படுத்துவது கண்டிக்கதக்கது" என்று தெரிவித்துள்ளார்.

"இம்மாதிரியான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட இரு நாடுகளில் ஒன்றால், மீறப்பட்டாலும் அல்லது அதனை கொண்டு அச்சுறுத்தப்பட்டாலும் முழு ஒப்பந்தமும் எவ்வாறு முறியடிக்கப்படும்" என்பதற்கு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்தியா அந்த ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை என்பதால்தான் இன்றளவும் நிலுவையில் உள்ளது என நீர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

ஆனால் மேற்கு பகுதி நதிகளிலிருந்து வரும் நீரை அதிகப்படியாக பயன்படுத்துவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஏற்கெனவே இந்தியாவால் கடைப்பிடிக்கப்படும் சில நீர் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.

சிந்து படுகையில் இருக்கும் இந்தியாவின் இரண்டு நீர்மின் திட்டங்களை கருத்தில் கொள்ள நடுநிலை நீதிமன்றம் ஒன்று வேண்டும் என இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்தியஸ்தம் செய்த உலக வங்கியிடம் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது

ஒப்பந்தம் ஆபத்தில் முடியும் என்ற அச்சத்தில் இருநாடுகளையும் தங்கள் கருத்து வேறுபாடுகளை சரி செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் உலக வங்கியிடம் இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியா தெரிவித்துள்ளது.

1987 ஆம் ஆண்டில் துல்புல் திட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இந்தியா அதை கைவிட்டது

ஆனால் அந்த திட்டம் தற்போது புதுப்பிக்கப்படலாம் என இந்திய நீர்வள அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

"அந்த இடைநீக்கத்தை மறு ஆய்வு செய்வது பாகிஸ்தானின் எதிர்ப்பை தாண்டியும் அதை மறு ஆய்வு செய்யும் மோதி அரசின் நோக்கத்திற்கான அறிகுறி" என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

"ஜீலம் நதியின் கட்டுப்பாடு இந்தியாவிற்குள் வந்தால் அது பாகிஸ்தானின் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்".

இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும் என்றும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவால் வேறென்ன செய்ய முடியும்?

தெற்காசியாவின் அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் குறித்த பிராந்திய நீர்வள நிபுணர் ஹிமான்ஷு தக்கர், "ஒப்பந்தத்தின் மறு ஆய்வு மேற்கு பகுதி நதிகளில் இந்தியா மேலும் உரிமைகளை கோருவதற்கு பயன்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் இந்தியா சீனாவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சில நீர் வள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செப்டம்பரில், இந்தியாவில் பிரமபுத்திர நதி என்று அழைக்கப்படும் யர்லங் சங்க் போ நதியின் கிளை நதிகளை ஒரு விலையுயர்ந்த நீர் திட்டத்தின் ஒரு பங்காக திபெத் தடுத்து நிறுத்தியது என சீன அரசின் செய்தி முகமையான ஷின்சுவா தெரிவித்துள்ளது

இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்ததையடுத்து அந்த செய்தி வெளிவந்தது.

"சிந்து படுகை மற்றும் பிரமபுத்திர படுகையில், சீனா மேல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது என்பதையும், பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளி என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று தக்கர் கூறுகிறார்.

மிகப்பெரிய மற்றும் கடினமான கட்டடமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவது இந்திய அதிகாரிகள் கூறுவது போல் எளிதானது அல்ல என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்