"தமிழக அமைச்சர்கள் மீதும் வருமான வரி நடவடிக்கைக்கு வாய்ப்பு" - என். ராம் பேட்டி

  • 24 டிசம்பர் 2016

"தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு, தமிழக அமைச்சர்கள் மீதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது", என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"மாபெரும் ஊழல் என்று சொல்லக்கூடிய அளவில், தமிழகத்தில் தொழில் ரீதியாக ஊழல் நடைபெற்றுள்ளது. அதனால், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. தேவை இருக்கிறது. ஆனால், எடுப்பார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், ஜெயலலிதா இருக்கும்போது சோதனை நடத்தவில்லை. இப்போது நடத்துகிறார்கள். சில மாநிலங்களில் செய்கிறார்கள். கேஜ்ரிவாலின் செயலாளருக்கு எதிராகச் செய்கிறார்கள். அதனால், மத்திய அரசின் நோக்கம், தூய்மையான நோக்கம் என்று சொல்ல முடியாது", என்றார் என். ராம்.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

இந்த சோதனை நடவடிக்கை, மாநிலத்தின் நேர்மைத் தன்மையை கேள்விக்குறியாக்கும் சம்பவம் என்றார் அவர். தலைமைச் செயலாளரே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் மீதே ஆழமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆனால், புதிய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேர்மையானவர் என்ற பெயர் பெற்றவர். அதை பாதுகாக்க வேண்டும் என்றார் ராம்.

இந்த நடவடிக்கையால் அதிமுகவுக்கு உடனடியாக எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்ற அவர், அதே நேரத்தில், வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனையை பெரிதாக எடுத்து பிரச்சனையாக்க திமுகவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், திமுக தற்போது பலம் வாய்ந்த கட்சியாக மாறியிருப்பதாகவும் என். ராம் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, பாரதீய ஜனதாவோ, காங்கிரஸோ தமிழகத்தில் அதிகாரத்தைப் பிடிக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்