தமன்னா, நயன்தாரா கோபம்: நடிகைகளின் கவர்ச்சி குறித்து கருத்து சொன்ன இயக்குநர் மன்னிப்புக் கேட்டார்

  • 26 டிசம்பர் 2016

"நடிகைகள், கவர்ச்சியாக உடை அணிந்தால்தான், பணம் கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், எனது படங்களில் நடிகைகளின் ஆடை கவர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வேன்" என்று தமிழ் திரைப்பட இயக்குநர் சுராஜ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நடிகைகள் தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நடிகை தமன்னா உள்ளிட்ட அனைத்து திரையுலக நடிகைகளும் தன்னை மன்னிக்க வேண்டும் என தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் சுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரியுள்ளார்.

நடிகைகளை ஆடை அணிய வைப்பது குறித்து தான் கூறிய கருத்துக்கு, எதிப்புகள் வலுத்து வரும் சூழலில் இயக்குநர் சுராஜ் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

யாரைப் பற்றியும் தவறாகப் பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தமக்கு கிடையாது என அதில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் சுராஜ், தன்னுடைய வார்த்தைகளை திரும்ப்ப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

`ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்'

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'கத்தி சண்டை' என்கிற படம் தொடர்பான பேட்டி ஒன்றை இணையதளம் ஒன்றிற்காக அவர் வழங்கியுள்ளார்.

அந்த பேட்டியில், தான் 'கடைசி வகுப்பு' ரசிகர்களுக்காக படம் எடுப்பதாகவும், காசு கொடுத்து திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்க்க வரும் ரசிகன், நடிகைகள் அரைகுறை ஆடை அணிய வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதன் காரணமாகவே, 'கத்தி சண்டை' என்கிற தனது படத்திற்காக நடிகை தமன்னாவை அரைகுறை ஆடை அணிய நிர்பந்தம் செய்ததாகவும், கோடிக் கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையிடம், அதை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆடை அலங்காரக் கலைஞர், கதாநாயகியின் ஆடை, முழங்காலுக்குக் கீழ் இருக்கும்படி கொண்டுவந்தால் அதைக் குறைக்கும்படி கூறுவதுண்டு என்றும், "மேடம் கோபப்படுவார்" என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினாலும், நான் சொன்னபடி செய்ய வைப்பேன்," என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

Image caption ட்விட்டரில் சுராஜ் மன்னிப்பு கோரி அறிக்கை

இந்த வீடியோ பேட்டி சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக நடிகைகள் தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் அதற்காக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இதுகுறித்து, தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், " நான் மிகவும் வேதனைப்படுகிறேன். எனது இயக்குநரின் கருத்தால் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன். அவர் என்னிடம் மட்டுமல்ல, திரையுலகில் உள்ள எல்லாப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் நடிகர்கள். மக்களை மகிழ்விக்க நடிக்கிறோம். ஆனால் எந்த நேரத்திலும் ஒரு கடைச்சரக்காக கருதக்கூடாது," என்று தமன்னா குறிப்பிட்டுள்ளார்.

"தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். நான் சவுகரியமானது எனக் கருதும் ஆடைகளைத்தான் அணிகிறேன். நமது நாட்டில் உள்ள பெண்களைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவது வேதனைக்குரியதுய ஒருவர் சொல்லும் கருத்தை வைத்து, இந்தத் துறையை எடைபோட்டுவிடக்கூடாது என ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தமன்னா குறிப்பிட்டுள்ளார்.

தமன்னா, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

பாகுபலி, கல்லூரி, கண்டேன் காதலை, பையா, தர்மதுரை போன்ற படங்களில் நடித்தற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள தமன்னா, தூய்மை இந்தியா திட்ட பிரசாரத்திற்காக இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்.

மேலும் 2016 ஆம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட முதல் பத்து இந்திய நடிகைகள் பட்டியலிலும் தமன்னா இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமன்னாவுக்கு முன்னதாகவே, நடிகை நயன்தாராவும் சுராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

"பணத்துக்காக ஆடைகளை அவிழ்ப்பவர்கள் அல்ல நடிகைகள். கதாநாயகிகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்று நினைக்க யாருக்கும் உரிமை இல்லை " என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்