மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது: வைகோ அறிவிப்பு

  • 27 டிசம்பர் 2016

இன்று சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

Image caption கோப்புப் படம்

மதிமுக உயர்நிலைக் கூட்டத்துக்கு பிறகுசெய்தியாளர்களிடம் வைகோ மேலும் தெரிவிக்கையில், "இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அரசியல் கூட்டணி குறித்தும், மதிமுகவின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

''இன்றைய கூட்டத்தின் முடிவில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து இருந்து மதிமுக விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்த வைகோ, கூட்டணியில் இருந்து விலகி விட்டாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனான தோழமை தொடரும் என்று தெரிவித்தார்.

Image caption விஜயகாந்த் மற்றும் ஜி.கே. வாசனுடன் சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள்

கூட்டணியிலிருந்து விலகியதற்கான குறிப்பான காரணங்கள் எதையும் வைகோ தெரிவிக்கவில்லை.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி

கடந்த 2015-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில், வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்தக் கூட்டியக்கத்திலிருந்து பிறகு மனித நேய மக்கள் கட்சி விலகிக் கொண்டது. அந்த சமயத்தில் நெருங்கி வந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடும் முடிவில், இந்தக் கூட்டியக்கம் மக்கள் நலக் கூட்டணி என்று கடந்த ஆண்டு நவம்பர் -ஆம் தேதியன்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தக் கூட்டணிக்கும் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கும் இடையில் 2016 மார்ச்சில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து, விஜயகாந்த்தை தங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி. ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இவர்களுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத வைகோ

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த வைகோ, கடைசி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யாமல் விலகிக்கொண்டார். இது குறித்து தங்களிடம் தெரிவிக்கப்படவில்லையென மக்கள் நலக் கூட்டணியின் பிற கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருந்தன.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அதை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அறிவித்தது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது.

அதேபோல மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கூட்டணியில் இருந்த பிற கட்சிகள் எதிர்க்கும் நிலையில், வைகோ அந்த நடவடிக்கையை ஆதரித்தார். இந்த மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டிலும் அவர் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இப்படியாக அந்தக் கூட்டணிக்குள் வைகோவுக்கும் பிற கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றிவந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக வைகோ அறிவித்திருக்கிறார்.

வைகோவின் முடிவு குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் கருத்து

வைகோவின் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். "பண மதிப்பு நீக்க நடவடிக்கையில், பா.ஜ.க. அரசின் முடிவை அவர் ஆதரிக்கிறார். பா.ஜ.கவுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்" என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

தன்னால் மக்கள் நலக் கூட்டணி உடையாது என்று கூறிவந்த வைகோ, இதிலிருந்து இப்போது தானாகவே வெளியேறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்