பெண்கள், விவசாயிகள், முதியோர், தொழில் துறையினருக்கு புதிய சலுகைகள், திட்டங்களை அறிவித்தார் நரேந்திர மோதி

  • 31 டிசம்பர் 2016

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புக்களை வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை Kevin Frayer
Image caption நேர்மையாளர்களின் நண்பன் இந்த அரசு: நரேந்திர மோதி

கடந்த ஐம்பது நாட்களாக மக்கள் கஷ்டப்பட்ட நிலையில், நிலைமையை மிக விரைவில் சீராக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வங்கியாளர்களையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டார்.

வங்கிகள் தங்களது பாரம்பரிய நடவடிக்கைகளில் இருந்து சற்று மாறி, ஏழைகள், நடுத்தர மக்கள் ஆகியோருக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டில், நேர்மையானவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர், மகளிர், விவசாயிகள், மூத்த குடிமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோருக்க பல திட்டங்களை அறிவித்தார்.

கர்ப்பிணிகளுக்கு 6000 ரூபாய்

தன்படி, கர்ப்பிணிகளுக்கு 6000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார்...

"மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும், பெண்கள், குழந்தைகளுக்க தடுப்பூசி போடும் பெண்களுக்கு 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் போடப்படும்," என்றார்.

மூத்த குடிமக்களுக்கு 7.5 லட்சம் வரை செய்யப்படும் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் தொகைக்கு எட்டு சதம் வட்டி வழங்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கு 60 நாள் வரை வட்டி செலுத்த வேண்டியதில்லை என்றார்.

"விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் முதன்மை வங்கிகளில் கடன்களுக்கு விவசாயிகள் 60 நாள் வரை வட்டி செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் கடந்த இரு மாதங்களில் செலுத்திய தொகை திருப்பித் தரப்படும்," என்றார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR
Image caption மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

வீடு கட்ட சலுகை

வீடு கட்டுவதற்கான சலுகைத் திட்டங்களையும் பிரதமர் அறிவித்தார்.

2017-ஆம் ஆண்டு நகரங்களில் வீடு கட்டக் கடன் வாங்கினால், 9 லட்சம் வரையிலான கடனுக்கு 4 சதம் வட்டி தள்ளுபடியும், 12 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதமும், 20 லட்சம் வரையிலான கடனுக்கு 2 சதமும் வட்டி தள்ளுபடி வழங்கப்படும்.

கிராமங்களிலும் வீடு கட்டுதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் மூன்று கோடி கிஸான் கார்டுகள், ரூபே டெபிட் கார்டுகளாக மாற்றப்படும். அதனால், அவர்கள் எல்லா இடங்களிலும் அதைப் பயன்படுத்த முடியும்.

நடுத்தர மற்றும் சிறுதொழில் துறையினருக்கான கடன் உத்தரவாதத் திட்டம், தற்போதுள்ள ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடியாக உயர்த்தப்படும்.

டிஜிடல் பரிவர்த்தனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கான வட்டி 6 சதமாக கணக்கிடப்படும்.

தொடர்புடைய தலைப்புகள்