மதம் மற்றும் சாதியை தேர்தல்களில் பயன்படுத்தக் கூடாது - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  • 2 ஜனவரி 2017

இந்திய அரசியல்வாதிகள் மதத்தை அல்லது சாதியை தேர்தல்களில் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

"மதச் சார்பற்ற தேர்தல் செயல்பாடுகளில், மதத்திற்கு எவ்வித பங்கும் கிடையாது" என்று இந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வாக்குகளை பெறுவதற்கு மதத்தை அல்லது சாதியை பயன்படுத்துவது தேர்தல் சட்டங்களின்படி மோசடி நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மதமும், சாதியும் பொதுவாக வாக்கெடுப்பில் செல்வாக்கு ஏற்படுத்தும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அடையாள முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூரிலும் சட்டமன்ற தேர்தலகள் நடைபெற இருக்கின்றன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகளுக்கு இடையில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் இந்த்த் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு நான்கு நீதிபதிகள் ஆதரவும், மூன்று நீதிபதிகள் மாறுபட்ட கருத்தும் தெரிவித்திருந்தனர்.

சாதி, நம்பிக்கை, மதம் ஆகியவை பற்றிய விவாதங்கள் அரசியல் சாசனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாக்கப்பட்டுள்ளதால், இதனை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்த பிரச்சனையை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பு பற்றி கருத்து வேற்றுமையுடைய நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சாதியும், மதமும் இந்திய தேர்தல்களில் மையமாக விளங்குகின்றன. பல கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அவர்களுடை மதம், சாதி ஆகியவற்றை கொண்டு தான் முடிவு செய்கின்றன. இந்த பிரச்சனைகளை ஒட்டியே வாக்காளர்களை கவரும் வகையில் பரப்புரையும் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.

மதமும், சாதியும் தேர்தல்களில் பயன்படுத்தப்படுவது சட்டப்பூர்வமானதா என்று இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட விவகாரத்தின் விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்