பருவநிலைப் போர்: தமிழகத்தில் இரு புதிய தொழில் முயற்சிகள்

உலகி்லேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் இரண்டு முன்னணி புதுப்பிக்கத்தக்க தூயஎரிசக்தி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Image caption தூத்துக்குடி சமையல் சோடா தயாரிக்கும் ஆலை

நிலக்கரி கொதிகலனில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவை தொழிற்சாலை ஆலை ஒன்று சேகரித்து வைத்துக் கொண்டு முக்கிய ரசாயனம் தயாரிக்கிறது.

இது உலகிலேயே முதல் முறையாகும்.

அந்த ஆலையிலிருந்து 100 கிமீ தூரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலை ஒன்று அமைந்துள்ளது. அதில் 10 சதுர கிமீ பரப்பளவில் உள்ள 150,000 வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கரியமில வாயுவை சேகரித்து, ரசாயனமாக மாற்றும் தொழில்நுட்பத்தை, மானியம் ஏதும் இல்லாமல் செயல்படுத்துவதால், இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

துறைமுக நகரான தூத்துக்குடியில் இந்த ரசாயன ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது; அதில் 60,000 டன்கள் கரியமில வாயு சேகரிக்கப்பட்டு அதன் மூலம் பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடாவை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருளாக பயன்படுத்தப்படும்.

இந்த ஆலை எவ்வாறு வேலை செய்கிறது?

1. தனது ரசாயனத் தயாரிப்புகளுக்கு தேவைப்படும் நீராவியை உருவாக்க இந்த தொழிற்சாலை நிலக்கரியால் இயக்கப்படும் கொதிகலன் ஒன்றை இயக்குகிறது.

2. இந்தக் கொதிகலனின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரியமிலவாயு, புதிய காப்புரிமை பெற்ற ஒரு நுண்ணிய ரசாயன ஆவியால் கழிவகற்றப்படுகிறது

3.இதன் பின் அந்தக் கரியமில வாயு ரசாயன ஆலைக்குள் மீண்டும் அனுப்பப்பட்டு, சமையல் சோடா மற்றும் கண்ணாடி, சலவைத்தூள், இனிப்பூட்டும் ரசாயனம் போன்ற பல பயனுள்ள கூட்டுப்பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருளாகிறது.

வாயு வெளியேற்றம் குறைப்பு

ரசாயன ஆலையின் உரிமையாளரான ராமச்சந்திரன் கோபாலன், "நான் ஒரு வியாபாரி; பூமியைக் காப்பாற்றுவது என்பது பற்றியெல்லாம் நான் சிந்தித்ததில்லை. எனக்கு தேவைப்பட்டதெல்லாம், தங்குதடையின்றி கிடைக்கக்கூடிய கரியமில வாயுதான். அதைப் பெறுவதற்கு இதுதான் சிறந்த வழி", என்றார்

தனது இந்த நடவடிக்கை இப்போது ஏறக்குறைய மாசு கழிவுகளை இல்லாமலாக்கிவிட்டது என்கிறார் அவர்.

உரத்தை ஒன்று சேர்த்து உருவாக்க மேலும் தேவைப்படும் கரியமில வாயுவை தயாரிக்க இரண்டாவது நிலக்கரி கொதிகலன் ஒன்றையும் விரைவில் வைக்கப்போவதாக அவர் கூறுகிறார்.

இந்த கரியமில வாயுவிலிருந்து கழிவுகளை அகற்றும் அந்த ரசாயனம் இரண்டு இளம் இந்திய வேதியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மேலும் உருவாக்க அவர்களுக்கு இந்தியாவில் நிதி உதவி கிடைக்கவில்லை.

அதனால் அவர்களின் நிறுவனமான கார்பன் கிளின் சொல்யூஷ்ன்ஸ், மும்பை ரசாயன தொழிட்நுட்ப நிறுவனத்துடனும் மேலும் லண்டன் இம்பீரியல் கல்லூரியுடனும் இணைந்து பணியாற்றி, ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொழில்முனைவோர் ஆதரவு திட்டத்தின் நிதி ஆதரவைப் பெற்றது.

Image caption ஒரு வருடத்தில் 60,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தை இந்த ஆலை பயன்படுத்துகிறது

கொதிகலன் புகைபோக்கியில் இருக்கும் கரியமில வாயு நுண்துகள்களுடன் ஒட்டிக்கொள்ளும் ஒருவித உப்பை இவர்களின் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.

இந்த தொழில்நுட்பம் இதே நோக்கத்துக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் எமீன் என்ற ரசாயானக் கூட்டுப்பொருட்களைக் காட்டிலும் திறன் வாய்ந்தது என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

மேலும் இதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. குறைவான ஆல்கலைன் கழிவை உருவாக்குகிறது; மேலும் மலிவு விலை எஃகை பயன்படுத்த அனுமதிக்கிறது; ஒட்டு மொத்தமாக இந்த செயல்முறையின் செலவை குறைக்கிறது என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

வெளியாகும் கார்பனை பிடித்து பயன்படுத்துவதால் காலநிலை மாற்றத்தை சரி செய்ய முடியாது; இருப்பினும் நிலக்கரியால் உலகில் வெளியாகும் கார்பனில் 5-10 சதவீதத்தைக் குறைக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

ஷெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரிட்டன் அரசின் கார்பன் கைப்பற்றுதலின் ஆலோசகர் குழுவின் தற்போதைய இயக்குநர் மற்றும் தலைவருமான லார்ட் ஆக்ஸ்பர்க், "படிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கேடுகளை குறைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் அனைவரும் செய்ய வேண்டும். குறைந்த அளவு கரியமில வாயுவையாவது பயனுள்ள பொருட்களாக மாற்ற பல வழிகள் கண்டுபிடிக்கப்படுவது சிறப்பான செய்தி" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

சூரிய சக்தி ஆலை

இதற்கிடையில், அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கமுதி என்ற இடத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய ஆலை ஒன்று உருவாகி இருப்பது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி கொள்கையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு ஒரு மைல் கல்லாக உள்ளது.

Image caption கமுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலை

அது உண்மையிலேயே பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து பார்த்தால், சூரிய ஒளித் தகடுகள் ஏறக்குறைய தொடுவானத்தை நோக்கி விரிகின்றன.

பிரதமர் மோதியின் திட்டப்படி, 2022ம் ஆண்டு வாக்கில், 60 மிலியன் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார இணைப்பு தரும் திட்டங்களுக்கு மானியங்கள் அளிக்கப்படும். மேலும், 2030 ஆண்டு வாக்கில் 40 சதவீத மின்சாரம், இது போன்ற புதுப்பிக்கப்படக்கூடிய மின்சாரமாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய திட்டங்களுக்கு, நிலக்கரியால் பெறப்படும் மின்சக்திக்கு ஆகும் செலவை விட புதிய சூரிய ஒளி எரிசக்திக்காகும் செலவு குறைவுதான்.

ஆனால் சூரிய ஒளி ஆண்டின் எந்நேரமும் பெருமளவில் உற்பத்தியாவதில்லை.

எனவே இந்தியா, எரிசக்தியை பொறுத்தவரை, எல்லா வகை மின்சாரங்களையும் அதிகம் உற்பத்தி செய்வது என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

இந்த சூரிய ஆலையின் பின்னணியில் இருக்கும் நிறுவனமான அதானி, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது; அதில் இருந்து இந்தியாவில் 100 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் மக்களை வறுமையிலிருந்து மேலே கொண்டு வர மிகப்பெரிய தேவையாக மின்சாரம் இருப்பதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே அதற்கு தீர்வாக இருக்காது என்று அந்நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான காலநிலை மாற்ற இலக்கை நிராகரிக்க வாய்ப்புள்ளதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து இந்தியாவும் அதன் உறுதியை கடைபிடிக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் மராகேஷில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் சீனா, ஐரோப்பா மற்றும் பல வளரும் நாடுகள், அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருந்தாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் தங்கள் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க உறுதியளித்துள்ளன.

ஆனால் இந்தியா இது குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

ஆயினும், சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை.

இத்தொழில் நுட்பத்தின் பின்னுள்ள பொருளாதார யதார்த்தங்கள் சுத்தமான எரிசக்திக்கான இந்தியாவின் முயற்சிகளை உந்திச்செல்லும் என்று அவர்கள் கூறுகிறார்கள்

தொடர்புடைய தலைப்புகள்