புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வெட்டிக் கொலை

  • 3 ஜனவரி 2017

புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான வி.எம்.சி. சிவகுமார் காரைக்காலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

காரைக்காலில் உள்ள நிரவியில் தான் கட்டிவரும் திருமண மண்டபத்தை பார்வையிடுவதற்காக சிவகுமார் இன்று அங்கு சென்றபோது, அவர் தனது காரிலிருந்து இறங்கியவுடன், 5 பேரைக் கொண்ட கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசியது. அதில் நிலைகுலைந்த அவரை அரிவாளால் வெட்டியது.

உயிருக்குப் போராடிய அவர், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

விஎம்சி சிவகுமார் தி.மு.கவின் சார்பில் நான்கு முறை புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஒரு முறை சபாநாயகராகவும் ஒரு முறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

அதற்குப் பிறகு சுயேச்சையாக போட்டியிட்ட அவர், கடந்த என்.ஆர். ரங்கசாமியின் அரசுக்கு ஆதரவளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்த சிவகுமார், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

காரைக்கால் பகுதியில் சாராய கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலில் இதுவரை 4 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இதில் சில கும்பல்களுடன் சிவகுமாருக்கு விரோதம் இருந்ததால், இவருக்கு சில காலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவந்தது.

கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறை தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது.