ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி டெல்லியில் 7 பேர் தொடர் உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே அத்தடையை நீக்க பல போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக் கோரி ஜல்லிக்கட்டு மீட்பிற்கான இயக்கம் என்ற 7 பேர் கொண்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய விளையாட்டு. அது தமிழரின் அடையாளம். எனவே அதை தடை செய்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அத்தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என அக்குழுவைச் சேர்ந்த மு.சுரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர்களின் இந்த போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தங்களை சந்தித்து ஆதரவு அளித்தாக மு.சுரேஷ் தெரிவித்தார். அதே சமயம் தமிழக ஆளுங்கட்சியிடமிருந்து தங்களுக்கு எந்த ஆதரவும் இதுவரை கிட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Image caption விலகுமா தடை?

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் சிலரின் உடல்நிலை மோசமாகியுள்ளதால் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது எனக்கூறி கோரி உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது.

ஆனால் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பது நாட்டு மாடுகளின் இன அழிவிற்கு வித்திடும் எனவும், அது தமிழர்களின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியம் எனவும் தமிழ் மக்கள் பலர் ஜல்லிக்கட்டிற்கான தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்