சசிகலா அளித்த நம்பிக்கையால் அதிமுகவில் தொடர்வதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு

மூன்று நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அதிமுகவின் பொது செயலாளர் சசிகலாவை இன்று நேரில் சந்தித்த பிறகு, தான் அதிமுகவில் தொடருவதாகத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AIADMK

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு தனக்கான அங்கீகாரம் அந்தக் கட்சியில் இருக்காது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார். கட்சி சார்பாக அவருக்கு வழங்கப்பட்ட காரையும் திரும்ப கொடுத்திருந்தார்.

தற்போது அவரது முடிவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பிபிசி தமிழுடன் பேசிய நாஞ்சில் சம்பத், சசிகலாவின் வார்த்தைகள் தனக்கு நம்பிக்கையை அளித்ததாக தெரிவித்தார். ''எனது சுதந்திரம் பறிக்கப்படாது என்றும் நான் தொடர்ந்து எனது வேலையைச் செய்ய வேண்டும் என்றும் சசிகலா கூறினார். அடுத்து வரப்போகிற உள்ளாட்சி தேர்தலில் நான் கட்சிக்கு உதவ வேண்டும் என்றார். எனது பணியில் எந்த இடையூறும் இருக்காது என சசிகலா நம்பிக்கை தந்தார், '' என்றார் நாஞ்சில் சம்பத்.

எதிர்காலத்தில் அதிமுகவில் சுதந்திரம் குறைந்தால் மீண்டும் கட்சியில் இருந்து விலக வாய்ப்பு இருக்குமா என்று கேட்டபோது, ''எனக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கை ,காரணமாக அது போன்ற ஒரு நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று எண்ணுகிறேன். அதிமுகவிற்காக தொடர்ந்து பிரசாரம் செய்வேன்,'' என்றார்.