கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு

  • 10 ஜனவரி 2017

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்து அது தொடர்பாக வெளியிட்ட காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.

படத்தின் காப்புரிமை TEJ BAHADUR YADAV
Image caption தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்ற சிப்பாய் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுக்கு காலை உணவாக ஒரு கோப்பை தேனீரும், கருகிய பரோட்டாவும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘’ எங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைந்ததற்கு காரணம், இதனை சமைத்த சமையல்காரர் அல்ல. மேல் மட்டத்தில் நடக்கும் ஊழல்களால், படையினருக்கு தேவையான மற்றும் தரமான உணவை படைப்பதற்கு வேண்டிய மளிகை பொருட்களை அதிகாரிகளால் வாங்க இயலவில்லை’’, என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TEJ BAHADUR YADAV
Image caption பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராணுவ சிப்பாயின் முகநூல் பதிவு

இது தொடர்பாக தேஜ் பகதூர் யாதவ் நான்கு காணொளிகளை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் , ‘’ இந்த காணொளிகள் ஓவ்வொரு இந்தியனுக்கும் மன வலியைத் தரும். நாட்டின் பெருமையாக கருதப்படுபவர்கள் ராணுவ சிப்பாய்கள். சிப்பாய்களுக்கு தேவையான தரமான உணவு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அமைப்பு (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பாதுகாப்புப் படை துருப்புகளின் நலனை மிகவும் முக்கியமானதாக பிஎஸ்எஃப் கருதுகிறது என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER RAJNATH SINGH

மேலும் அந்த அமைப்பு குறிப்பிடுகையில், இந்த விஷயத்தில் ஏதேனும் தனிப்பட்ட தவறுகள் நேர்ந்துள்ளதா என்று விசாரணை செய்து வருகிறோம். இது குறித்து விசாரணை செய்ய சம்பவ இடத்துக்கு ஒரு மூத்த அதிகாரி சென்றுள்ளார் என்று பிஎஸ்எஃப் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த ட்விட்டர் செய்தியில், ''ராணுவ சிப்பாயின் அவல நிலை குறித்து விளக்கும் காணொளி ஒன்றை நான் பார்த்தேன். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பிஎஸ்எஃப் அமைப்புக்கு உடனடியாக உத்தரவிடவும், தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் உள்துறை அமைச்சக செயலருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்