இரவு முழுவதும் தொடர்ந்த ஜல்லிக்கட்டு போராட்டம்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏரளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ( செவ்வாய்க்கிழமை) முதல் நடத்தி வந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் குறித்த காணொளியை காண: சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே போல், மதுரை, அலங்காநல்லூர், திருநெல்வேலி, சேலம் போன்ற தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஏராளமானவர்கள் போராட்டம் வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கருத்து குறித்த காணொளியை காண: ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)
போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்கள் கருத்தினை பதிவு செய்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீசார்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு போராட்டக்கார்கள் தங்களது செல்போன்களில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தது.
இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.
கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எப்போதுவேண்டுமெனாலும் செல்லலாம் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்