ஜல்லிக்கட்டு எழுச்சிகள் காட்டுவது என்ன ?

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

Image caption மூன்றவது நாளாக சென்னையில் போராட்டம் தொடர்கிறது

சென்னையின் மெரினா கடற்கரையில் பிரதானமாக கூடியிருக்கும் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக அதே இடத்தில் அமைதியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

Image caption சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

இந்தப் போராட்டங்கள் அனைத்துமே தன்னிச்சையான, ஒருவிதமான ஒழுங்கோடு, தலைமை ஏதுமின்றி நடைபெற்றுவருகின்றன. 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இவ்வளவு பெரிய அளவில் ஒரு தன்னெழுச்சியான போராட்டம் நடக்கவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பெரும்பகுதி ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிடப்படும் தகவல்களின் மூலமும் வாட்ஸப் தகவல்களின் மூலமும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Image caption ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த ஐடி ஊழியர்கள்

அமைதியான முறையில் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவது, வன்முறையின்றி தொடர்ந்து நடத்தப்படுவது, பெண்களும் பெரிய அளவில் இந்தப் போராட்டங்களில் பங்கேற்பது ஆகியவை இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த பண்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

பல்வேறு அதிருப்திகளின் உச்சகட்டமாகவே இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றுப் பேராசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி.

"எப்போதுமே பண்பாட்டு அம்சங்களை முன் வைத்துத்தான் பெரிய அளவிலான போராட்டங்கள் உருவெடுக்கும். பண மதிப்பு நீக்கம், விவசாயிகள் மரணம் போன்ற பிரச்சனைகளின் மீது பெரிய அளவில் அதிருப்தி இருந்தாலும், அவற்றுக்கும் ஒரு எதிர்ப்பாகவே இந்தப் போராட்டத்தைப் பார்க்க முடியும். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. தங்களுக்கு இருக்கும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திவருகிறார்கள்" என்கிறார் வேங்கடாசலபதி.

ஜல்லிக்கட்டு போன்ற தமிழகத்தின் சில பகுதிகளில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு தடைபடும்போது பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் நிலையில், பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்காக வெடிக்காதது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகின்றன.

Image caption மாடுகளையும், கன்றுக் குட்டிகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

"அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை இம்மாதிரி பிரச்சனைகளுக்கு மக்கள் போராட வேண்டுமென நினைக்கிறோம். ஆனால், மக்கள் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்லோருக்குமே ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அம்மாதிரியான ஒரு அடையாளத்தில் கைவைக்கப்படும்போது எல்லோரும் கிளர்ந்தெழுகிறார்கள். சமூக வலைதளங்கள் இதனைக் கண்ணுக்குத் தெரியாமல் ஒருங்கிணைக்கின்றன" என்கிறார் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழ்நாடு போன்ற முழுவதும் நகர்மயமான ஒரு மாநிலத்தில் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் சென்று, தன்னுடைய கலாசார அடையாளமாக ஒரு விஷயத்தை கொண்டாடுவது மக்களுக்கு ஆசுவாசமளிக்கிறது. அந்த கலாச்சார அடையாளம் தடைபடும் என்று சொல்லும்போது பலர் போராட முன்வருகிறார்கள் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், இம்மாதிரி போராட்டங்களுக்கு ஒரு நீண்ட காலத் தன்மை இருப்பதில்லை. அண்ணா ஹசாரேவின் போராட்டம், பிரபாகரனின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகளுக்கு பிறகு வந்த எழுச்சி, மது விலக்கு தொடர்பான போராட்டங்கள் போன்றவையெல்லாம் அந்தந்தத் தருணங்களோடு முடிந்துவிட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தற்போதைய போராட்டத்தை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

அப்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தற்போதைய போராட்டத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் தலைவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவருமான பேராசிரியர் ராமசாமி.

"ஆனால், அந்தக் காலகட்டத்தில் தகவல் தொடர்பு என்பது மிகக் கடினமாக இருந்தது. நான் ஒரு தகவலை தொலைபேசி மூலம் தெரிவிக்க அரை நாள் தந்தி அலுவலகத்தில் காத்திருந்திருக்கிறேன். இப்போது வாட்ஸப் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்பட்டுவிடுகின்றன" என்கிறார் ராமசாமி.

மேலும் அப்போது ஒரே ஒரு நாளிதழைத் தவிர பிற நாளிதழ்கள் எல்லாமே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக இருந்தன என்கிறார் ராமசாமி. மேலும் வானொலி அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த தகவல்கள் மிகவும் குறைவாகவே மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் வேறானது என்று சுட்டிக்காட்டுகிறார் ராமசாமி.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒட்டுமொத்த தமிழ் அடையாளமாக முன்னிறுத்துவதும் பல்வேறு தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. "பண மதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு தரப்பினரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கின்றன. அதேபோல மீனவர் மீதான தாக்குதல்கள் ஒரு தரப்பினருக்கானது என சிலரால் கருதப்படுகின்றன. ஆனால், ஜல்லிக்கட்டை ஒரு பொது அடையாளமாக கருதி இந்த போராட்டங்கள் நடக்கின்றன. அப்படித்தான் நடக்கும்" என்கிறார் பேராசிரியர் வேங்கடாசலபதி.

Image caption போராட்ட களமாக மாறிய அலங்காநல்லூர்

"முதலாவது உலகப் போருக்கு செரயோவாவில் ஆஸ்திரிய இளவரசர் சுட்டுக்கொல்லப்பட்டது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் பல்வேறு அம்சங்கள்தான் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தன. அதைப்போலத்தான் ஜல்லிக்கட்டை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடந்தாலும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்துமுகமாகவே இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன" என்கிறார் மானுடவியல் ஆய்வாளரான ராஜன் குறை.

தங்கள் அடையாளங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அதனை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன என்கிறார் ராஜன் குறை. இந்தப் போராட்டங்கள் எதையும் சாதிக்காமல் முடிந்துவிட்டால்கூட, அவற்றின் தாக்கம் மறைமுகமாக மிக வலுவானதாக இருக்கும் என்கிறார் ராஜன் குறை.

இந்தப் போராட்டங்களை தனி நபர்கள், சில இயக்கங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்லப்படுவதை புறந்தள்ளுகிறார் வேங்கடாசலபதி. "அவ்வளவு சக்திவாய்ந்த நபர்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன். அப்படி யாரும் கிடையாது" என்கிறார் வேங்கடாசலபதி.

அலங்காநல்லூர், சென்னை மெரீனா உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் இரவில் போராட்டக் களங்களிலேயே தங்கிவருகின்றனர். அதேபோல பெரிய எண்ணிக்கையில் இந்தப் போராட்டங்களிலும் பங்கேற்றுவருகின்றனர்.

பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றிருப்பது, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்