ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு; தி.மு.க. ரயில் மறியல்

  • 20 ஜனவரி 2017

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Image caption ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக ரெயில் மறியல் போராட்டம்

தி.மு.கவின் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறதா?

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நடந்துவரும் போராட்டங்கள் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளன. சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நிரந்தரமாக போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

Image caption தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி தி.மு.கவின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஸ்டாலின்

இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன.

Image caption திரையரங்குகள் மூடல்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கிவருகின்றன. ஆட்டோக்கள், டாடா மேஜிக் வானங்கள் மிகச் சிறிய அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு தடைக்கும், நாட்டுக் காளைகள் குறைவதற்கும் தொடர்பு இல்லை - பீட்டா

திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

Image caption வெறிச்சோடிய தெருக்கள் - ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவாக திரைப்படக் கலைஞர்களும் இன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க. ரயில் மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. ரயில் மறியல் போராட்டங்களை நடத்தியது. சென்னை எழும்பூரில் கனிமொழி தலைமையிலும் மாம்பலத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டனர்.

ரயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். இதனால், சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Image caption சிறுவர்களும் போராட்டத்தில்

பிரதானமாக நடைபெறும் போராட்டங்களைத் தவிர, ஆங்காங்கே மக்கள் தாங்களாக முன்வந்து சிறு சிறு அளவிலும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பெருமளவில் சிறுவர்களும் பங்குபெறச் செய்யப்படுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ;பிபிசி தமிழ் யு டியூப்