ஜல்லிக்கட்டு வன்முறை: கைதானவர்களை விடுவிக்க மக்கள் நலக்கூட்டணி கோரிக்கை

  • 24 ஜனவரி 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுததியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சென்னையில் வன்முறை (கோப்புக்காட்சி)

இதுதொடர்பாக பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், இந்தச் சம்பவத்துக்கு இந்த வன்மறைச் சம்பவத்துக்கு தமிழக அரசும், காவல் துறையுமே முழுப்பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.

மெரீனா கடற்கரையில் திங்கள்கிழமையன்று காவல் துறையினர் தாக்குதல் நடத்தியபோது, 4-5 மணி நேரம் அவகாசம் கொடுங்கள், அவசரச் சட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறோம் என்று இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதை மறுத்து, போலீசார் கடுமையாகத் தாக்கினார்கள் என்று அவர் புகார் கூறினார்.

காவல் துறையைச் சேர்ந்தவர்களே வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சி செய்திகளில் கூட ஒளிபரப்பாகியிருக்கிறது என்று புகார் கூறினார்.

அதே நேரத்தில், தங்களது வன்முறைச் செயலை நியாயப்படுத்தும் வகையில், அந்தக் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக போலீசார் திரித்துக் கூறியிருக்கிறார்கள் என்றார் ராமகிருஷ்ணன்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இன்றும் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் நடக்கின்றன. அதை நிறுத்த வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் ஓர் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.

காவல் துறை நடவடிக்கையைக் கண்டித்து, மதுரை, கோவை மற்றும் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் வரும் 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்