ஜல்லிக்கட்டுப் போராட்ட உணர்வால், பெப்சி,கோக் விற்பனைக்கு தடை- வணிகர் அமைப்பு

  • 25 ஜனவரி 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு பானங்கள் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் விக்கிரமராஜா உரையாடிய போது, ''1998- ஆம் ஆண்டே பெப்சி நிறுவன குளிர் பானங்களுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். அச்சமயத்தில் பொது மக்களின் ஆதரவு இதற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அந்நிய ஆதிக்கம் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற கோஷத்தை முன்வைத்தனர்'' என்று விக்கிரமராஜா நினைவு கூர்ந்தார்.

இச்சூழலில், பெப்சி, கோக் நிறுவனங்களை தடை செய்யவும், இப்பானங்களை புறக்கணிக்கவும் தற்போது வலியுறுத்தினால் வெற்றி பெற இயலும் என்ற திடமான எண்ணத்தில் எங்களின் நேற்றைய வணிகர் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலம் இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பின்னர், மார்ச் மாதம் முதல் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர் பானங்கள் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது'' என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெப்சி-கோக் விற்பனைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

'தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாழ்படுத்தும் அந்நிய நிறுவனங்கள்'

வெளிநாட்டு குளிர் பானங்களை குறிப்பாக எதிர்க்க காரணம் என்னவென்பது பற்றி குறிப்பிட்ட விக்கிரமராஜா , '' இந்த நிறுவனங்களால் தமிழகத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் தமிழகத்தின் ஆதாரமான குடிநீர் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறது'' என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உணவு வகைகளை தற்போது தாங்கள் உடனடி ஆபத்தாக கருதவில்லை என்று தெரிவித்த விக்கிரமராஜா, அதனால் அவற்றின் விற்பனை தடை குறித்து தற்போது ஆலோசிக்கப்படவில்லை என்றும், மேற்கூறிய வெளிநாட்டு குளிர் பானங்களால் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இவற்றை தாங்கள் பொது மக்களிடையே எடுத்துக் கூறப்போவதாவும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப்படம்)

''உள்நாட்டு குளிர் பானங்களில் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கிறது. அதனால் அவற்றை ஊக்குவிக்க நாங்கள் முயற்சிகள் எடுப்போம். அவற்றில் எந்த நச்சுத்தன்மையும் இருக்காது. அவற்றில் ஆரோக்கிய ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அதன் தரத்தை மேம்படுத்த நாங்கள் வலியுறுத்துவோம்'' என்று உள்நாட்டு குளிர் பானங்களை ஊக்குவிப்பதன் காரணம் குறித்து விக்கிரமராஜா எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 6000 இணைப்பு சங்கங்கள் , மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி போன்றவற்றை விற்பனை செய்யமாட்டோம் என்ற எங்களின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற சங்கங்களுடன் இது குறித்து பேசி இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்று விக்கிரமராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

'அரசின் தடை அல்ல, மக்களின் புறக்கணிப்பே வேண்டும்'

''இந்த வெளிநாட்டு குளிர் பானங்களளை தடை செய்ய வேண்டும் என்று அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், இவற்றை புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைக்கிறோம்'' என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று விழுப்புரத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சிறப்புக் கூட்டத்தில், மார்ச் மாதம் முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்