எண்ணெய் படலம் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம்

  • 5 பிப்ரவரி 2017

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே எண்ணெய் படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வரும் பகுதியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா உள்ளிட்டோரும் உடனிருந்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடலில் கலந்துள்ள எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் 5700 பேர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அந்த எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில், மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 25 சிறப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த பணி ஓரிரு நாட்களில் முழுமையாக நிறைவடையும் எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் பாதிக்கப்பட்ட இடங்களில் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன எனவும், மீன்களில் எந்தவித நச்சுப்பொருட்களும் கலக்கவில்லை என ஆய்வில் தெரிவித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார்.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

எண்ணூர் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணிகள் (புகைப்படத் தொகுப்பு)

அந்த கசிவால் வெளியேறிய எண்ணெய், கடல்நீர், மண் மற்றும் இதர பொருள்களுடன் கலந்து உறைந்து போய் சேறும், சகதியுமாக கடற்கரைகளில் காணப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில், சிறிதளவே எண்ணெய் கசிந்துள்ளதாக எண்ணூர் துறைமுக செய்தி அறிக்கைகள் கூறியிருந்த சூழலில், சென்னையிலுள்ள எண்ணூர், மெரினா, ஆர்.கே.நகர், காந்தி நகர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அதிக எண்ணெய் திட்டுக்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் படலம் அகற்றம்: மத்திய அரசு

கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு நேற்று சனிக்கிழமை முதல் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எண்ணெய் படலங்கள் அகற்றப்படும் பகுதியை பார்வையிட துவங்கியுள்ள நிலையில், இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே பகுதியில் ஆய்வு செய்ய வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்