சசிகலா முதல்வராகப் பதவியேற்பதை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் சசிகலா
படக்குறிப்பு,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா (கோப்புப்படம் )

அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துவிட்டது. அதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மத்திய அரசு தலையிட்டதாகவும், நீதிபதிகளுக்கு பணம் கை மாறியதாகவும் நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தீர்ப்பு வரும் வரை, சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்பதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.