ஆளுநரின் சென்னை பயணம் தாமதம் ஏன்?

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை செல்லும் திட்டம் இதுவரை முடிவாகவில்லை என்று மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

Image caption ஓ. பன்னீர் செல்வத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் (கோப்புப்படம்)

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக வி.கே. சசிகலா தேரந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்தார். ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநரைச் சந்திக்க வேண்டும். ஆனால், சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை செல்லவில்லை.

உதகைப் பயணத்தை முடித்துக் கொண்டு, அவர் நேரடியாக டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதே நேரத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு விசாரணை முடிந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் : பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு

அதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் உள்பட சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் சசிகலாவுக்கு முதலமைச்சராகப் பதவியேற்பு செய்து வைப்பது பொருத்தமாக இருக்குமா என்று அவர் விளக்கங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இன்னொருபுறம், சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வந்த நிலையில், ஆளுநர் வருகை தாமதமானதால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

ஆளுநரும், டெல்லியில் இருந்து சென்னை செல்லாமல் மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்குச் சென்றுவிட்டார். அவர் எப்போது சென்னை செல்வார் என்பது இதுவரை தெரியவில்லை.

சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை: தீபா

இது தொடர்பாக, மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி உமேஷ் காஷிகரிடம் பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, "செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநர் சென்னை செல்லும் திட்டம் இல்லை. புதன்கிழமையன்று செல்வது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

ஆளுநரின் பயணம் தாமதமாவதால், சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "அப்படி எதுவும் தாமதம் இல்லை" என்று அவர் மறுத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்