'எனது ஒப்புதல் இன்றி அதிமுக வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டாம்' ஓபிஎஸ் வங்கிகளுக்குக் கடிதம்

  • 9 பிப்ரவரி 2017

அ.தி.மு.கவின் வங்கிக் கணக்குகளில் இருந்து தன்னுடைய எழுத்து மூலமான ஒப்புதல் இன்றி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என தமிழக முதல்வரும் அ.தி.மு.கவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'அதிமுக வங்கிக் கணக்குகளில் எனது ஒப்புதல் இன்றி பரிவர்த்தனைகளைஅனுமதிக்கக்கூடாது'

அ.தி.மு.கவிற்கு பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இரண்டு வங்கிகளில் கணக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், அந்தக் கட்சியின் பொருளாளராக இருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவில் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த இரு வங்கிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் சட்டவிதிகளின்படி அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தேர்வுசெய்யப்படும்வரை, கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் அதே பொறுப்பில்தான் நீடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஆகவே, பொருளாளரான தன்னுடைய எழுத்து மூலமான ஒப்புதலின்றி அ.தி.மு.கவின் வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாமென பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவலை அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பியான மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, புதிய பொதுச் செயலாளராக சசிகலா பொதுக் குழு உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டார். அ.தி.மு.கவின் விதிகளின்படி பொதுச் செயலாளர் கட்சியின் அனைத்து நிர்வாகிகளாலும் தேர்வுசெய்யப்பட வேண்டும் என அவரது எதிர் தரப்பு கூறிவரும் நிலையில், இந்தக் கடிதத்தை ஓ. பன்னீர்செல்வம் எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்