சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம் பெற்றதாக புகார்

  • 10 பிப்ரவரி 2017

சசிகலா ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி. சண்முகநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவந்த சண்முகநாதன் செய்தியாளர்களிடம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது என்றும் சசிகலா தரப்பு அவர்களை சிறை வைப்பது போல தனியாக வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

முதல்வர் பன்னீர்செல்வத்துடன் ஆளுநர் வித்யாசாகரை சந்தித்தபோதும் புகார் ஒன்றை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை விடுவித்தால் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார் அவர்.

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்குவதற்கு பதிலாக தனியார் விடுதியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளதாக கூறினார்.

முன்னதாக சசிகலா தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேருந்தில் சென்ற சண்முகநாதன், அங்கிருந்து வெளியேறி முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வந்துசேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.