ஓ.பி.எஸ் அணியில் இணைந்த பெண் எம்.பி.க்கள்

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தரப்பில் இருந்த இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை இரவு முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

திருவண்ணாமலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனரோஜா, "மக்களுக்காக நான், மக்களால் நான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது கொள்கைப்படி மக்களின் எண்ணங்களை ஏற்றுத்தான் இன்று நான் இங்கு வந்துள்ளேன்,'' என்றார்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்பதாக கூறிய அவர், ''தமிழக மக்கள், எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது இன்னும் சிறிது நாட்களில் வெளியே வரும்,'' என்றார்.

முன்னதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அவர் ஜெயலலிதா கட்சி நடத்தியது போல தான் நடத்துவேன் என்று சசிகலா கூறியதால் தான் இதுவரை அவரது ஆதரவு அணியில் இருந்ததாகவும், தற்போது கட்சிக்கு துரோகம் மற்றும் ஜெயலலிதா விலக்கி வைத்த நபர்களுக்கு பதவி கொடுப்பது ஆகியவை நடப்பதால் சசிகலா தரப்பில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

''ஜெயலலிதாவின் ஆசி என்றுமே முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு தான் உள்ளது. தினமும் எனது தொகுதி மக்கள் தொலைபேசியில் அழைத்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்குமாறு கூறினார்கள்,'' என்றார்.

ஓரளவுக்குத்தான் பொறுமை காப்போம் - சசிகலா எச்சரிக்கை

ஏற்கெனவே, சனிக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பன்னீர் செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது வரை முதலவர் பன்னீர்செல்வத்திற்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்.

அதுதவிர, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையனும் பன்னீர் செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விடுதியில் ஜாலியாகத்தான் இருக்கிறோம் : எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

சசிகலா தரப்பில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை உறுதி செய்ய இயலவில்லை.

அவர்களை சனிக்கிழமை மாலை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களிடம் அவரது சந்திப்பு பற்றி பேசியபோது, ''அதிமுகவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த மகிழ்ச்சி'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்