அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

  • 14 பிப்ரவரி 2017

தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக தற்போது சந்தித்துவரும் அரசியல் நெருக்கடி அதன் 45 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது முறையாக நிகழ்கிறது.

தலைவர் இறந்தபின் கட்சி இரண்டாகப் பிளவு படுவது, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறல் , ஆட்சி அமைப்பது யார் என்ற குழப்பம், ஆளுநரின் பங்கு குறித்த சர்ச்சை, மத்திய அரசின் மீது சந்தேகம், எதிர்கட்சியான திமுக மீது குற்றச்சாட்டு என இப்போது அரங்கேறிவரும் காட்சிகள் எல்லாமே, அஇஅதிமுகவின் வரலாற்றில் முன்பும் ஒருமுறை கண்டவைதான்.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை கவனித்துவரும் எவருக்கும், இப்போதைய நிகழ்வுகள் 1987ல் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த பின்னர் கட்சியும் தமிழகமும் சந்தித்த பரபரப்பான காட்சிகளையே நினைவுபடுத்தும்.

ஒரு சில ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், 1987 டிசம்பர் 24ல் இறந்த உடனேயே, கட்சி மற்றும் ஆட்சியின் தலைமைப்பதவிக்கான குடுமிபிடிச் சண்டை தொடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆர் மறைந்த நேரத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் இருந்தாலும், அவரை ஒரு உண்மையான போட்டியாளராக கட்சியில் யாரும் கருதவில்லை.

எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன்பே கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளராக அவரால் நியமிக்கப்பட்ட அவருடைய திரையுலக ஜோடி நட்சத்திரம், ஜெயலலிதாதான், அவருடைய மறைவுக்குப் பின்னர் தலைமைப்பதவிக்கு கடும் போட்டியாளராக மாறினார்.

அதிமுகவுக்குள் ஜெயலலிதா கொண்டுவரப்பட்டதையும், அவருக்கு விரைவில் அடுத்தடுத்து அளிக்கப்பட்ட பதவிகளையும் கசப்புடன் கவனித்து , அவ்வப்போது எதிர்த்தும் வந்த, எம்.,ஜி.ஆரின் பல படங்களைத் தயாரித்தவரும், அப்போதைய அமைச்சருமான, ஆர்.எம்.வீரப்பன் தலைமையில், ஜெயலலிதாவின் இந்த முயற்சிக்கு எதிராக கடும் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சடல வண்டியில் சர்ச்சை

எம்.,ஜி.ஆரின் மனைவியும், பழைய திரைப்பட நடிகையுமான, வி.என்.ஜானகியை அஇஅதிமுக தலைமைப் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் முன்னிறுத்தியது வீரப்பன் அணி.

ஜானகி - ஜெயலலிதா போட்டி என்பது எம்.ஜி.ஆர் இறந்து அவர் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே நடந்த சம்பவங்களால் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

Image caption வி.என்.ஜானகியை அதிமுக தலைமைப் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் முன்னிறுத்தியது வீரப்பன் அணி.

உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆரை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இறந்த நிலையில் அவரது உடலுக்கருகே வந்து நின்று கொண்டார்.

சசிகலா நடராஜன்: நிழல், நிஜமானது

எம்.ஜி.ஆரின் உடல் இறுதி ஊர்வலத்துக்காக ராணுவ பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டபோது, அந்த வண்டியில் ஏற முயன்ற ஜெயல்லிதாவை, அப்போதைய ஜானகி அணி எம்.எல்.ஏ ஒருவர் கீழே தள்ளிவிட அதுவே ஜெயலலிதாவுக்குப் பெரும் அனுதாபத்தைத் தேடித்தந்தது.

கட்சி அலுவலகத்தைப் பிடிக்க முயற்சி

அப்போதைய பிளவின் போது, ஜானகி அணியில், ஆர்.எம்.வீரப்பன் தவிர, சட்டமன்ற சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

கொள்ளையடிப்பதற்காக முதலமைச்சருக்கான போட்டி நடக்கிறது: மு.க. ஸ்டாலின்

தீர்ப்பு எப்படியிருக்க வாய்ப்பு? தாக்கங்கள் என்ன?

ஜெயலலிதா அணியில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன்,சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்.திருநாவுக்கரசு என பல அமைச்சர்கள் அங்கம் வகித்தனர்.

ஜெயலலிதா- ஜானகி போட்டி முதலில் அவ்வை ஷண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றும் முயற்சியாக வீதிக்கு வந்தது.

Image caption ஜெயலலிதா உட்பட அவரது அணித்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரு அணிகளும் போட்டி பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதாக அறிவித்திருந்தன. ஆனால் ஜானகி அணி பின்னர் தனது கூட்டத்தை ரத்து செய்ய, ஜெயலலிதா அணி மட்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முயன்றது.

நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்தவுடன் முதலமைச்சர் ஆகியிருப்பேன்: சசிகலா

போலிசார் இதைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போக, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஜெயலலிதா உட்பட அவரது அணித்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டசபையில் வெடித்த வன்முறை

ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் மொத்தம் சுமார் 130 பேரில் 33 பேரே ஜெயலலிதா அணியில் இருந்தனர். ஜானகி அணியில் மீதமுள்ளோர் இருந்தனார்.

யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. இந்த நிலையில் ஜனவரியில் ஜானகி ராமச்சந்திரனை சர்ச்சைக்குரிய வகையில் தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அப்போதைய ஆளுநர் எஸ்.எல்.குரானா.

ஜானகி ராமச்சந்திரன், இந்திய அரசியலில், கணவன் இறந்த பின் அவரது அரசியல் வாரிசாகும் முதல் பெண்மணியானார்.

ஆனால் ஜானகி ராமச்சந்திரன் தனக்கு பெரும்பான்மை பலத்தை அவையில் 21 நாட்களுக்குள் நிரூபிக்க குரானா உத்தரவிட்ட நிலையில், பெரும் பரபரப்பான சூழலில் ஜனவரி 28-ஆம் தேதி சட்டமன்றம் கூடியது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிக மோசமான வன்முறை நடந்தேறிய நாள் அது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸும், திமுகவும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நிலையில், அஇஅதிமுகவில் ஜெயலலிதா அணி உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கிய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பின்னர் ஜானகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவித்தார்.

போலிஸ் நுழைந்தது

சட்டமன்றத்தில் வன்முறை வெடித்தது.

ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளின் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கையில் கிடைத்த மைக்குகள், பேப்பர் வெயிட்டுகள் என எல்லாவற்றையும் ஆயுதமாக்கி மோதிக்கொள்ள, அப்போதைய சென்னை போலிஸ் கமிஷனர் வால்டர் தேவரம் தலைமையில் ஆயுத போலிசார் சட்டமன்றத்துக்குள் நுழைந்து , இந்திய சட்டமன்ற, பாராளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி சட்டமன்ற கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியிலும், வன்முறையிலும் காயமடைந்த எம்.எல்.ஏக்கள், அவையில் பிடுங்கப்பட்ட மைக்குகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் அவையிலிருந்து வெளியேறிய காட்சியை, இணையம் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், அரச தொலைக்காட்சியான தூரதர்ஷனும், பத்திரிகைகளும் காட்டின.

அவையில் நடந்த இந்த அமளிக்குப் பின்னர், தமிழக சட்டசபையை கலைக்க குடியரசுத்தலைவர் உத்தரவிட்டு, பின்னர் நடந்த தேர்தல்களில் ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் தனித்தனியாக நின்று, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்தது.

தீர்ப்பை எதிர்நோக்கும் அஇஅதிமுக அரசியல்

ஆனால் இவையெல்லாம் இப்போது மீண்டும் நிகழுமா என்பது ஒரு மிலியன் டாலர் கேள்விதான். இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில்,தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாக வந்தால், ஆளுநர் அவரை பதவி ஏற்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய், சசிகலா தனது பெரும்பான்மை பலத்தை அவையில் நிரூபித்தால் 1988ல் நடந்த சட்டசபை ரணகளம் தவிர்க்கப்படலாம்.

அ.தி.மு.க அதிகாரப் போட்டி : வாட்ஸ் ஆப் நையாண்டிகள்

ஆனால் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக அமைந்து, தற்போது அவர் ``கட்டுப்பாட்டில்`` இருப்பதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுக்கோப்பு குலைந்து மேலும் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினால், அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், 1988 மீண்டும் திரும்புவதும் நடக்கக்கூடியதுதான்.

வரலாறு முதல் முறை துன்பியல் சம்பவமாகவும், இரண்டாவது முறை கேலிக்கூத்தாகவும் திரும்பும் என்ற மேற்கோள் தமிழகத்துக்கு பொருந்தும் நிலை ஏற்படுமா என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்