ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

  • 13 பிப்ரவரி 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழியும், தற்போதைய அதிமுக பொதுச் செயலருமான சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை காலை அறிவிக்க உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதற்கு முன்னதாக, சிறப்பு நீதிமன்றம், 2014-ஆம் ஆண்டு அவர்களுக்கு விதித்த தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து, கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திமுகவின் பொதுச் செயலர் க. அன்பழகனும் இதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமை, (பிப்ரவரி 14-ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதிகள், பினாக்கி சந்திர கோஷ் மற்றும் அமிதவ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்க உள்ளது.

கடந்த 1991-96ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 66.65 கோடி ரூபாய்க்கு வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்