கொள்ளையடிப்பதற்காக முதலமைச்சருக்கான போட்டி நடக்கிறது: மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா ஆட்சியில் எப்படி கொள்ளையடிக்கப்பட்டதோ அதேபோல கொள்ளையடிப்பதற்காகவே இருதரப்பும் தற்போது மோதிவருவதாக திமுகவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN

தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக்குழுகூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலையில் நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுனர் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகம் நீட் தேர்வு, வறட்சி, குடிநீர் பஞ்சம் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், யார் முதலமைச்சராக அமர்வது என்ற போட்டி கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையில் நடந்துகொண்டிருப்பதாக கூறினார். காபந்து முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அரசியல் சட்டப்படி நிலையான அரசு அமைவதற்கான நடவடிக்கையை ஆளுனர் எடுக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், பெரும்பான்மை உள்ளவர்கள் ஆட்சியமைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சட்டப்பேரவையில் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு எதிர்க்கட்சி என்றாலும் அரசியல் களத்தில் அ.தி.மு.க. என்பது தங்களுக்கு எதிரி என்றும் சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி இரண்டுமே தங்களுக்கு எதிரி அணிகள்தான் என்றும் ஸ்டாலின் கூறினார்.

5 வருடமாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி இருந்தபோது எப்படி இந்த நாடு குட்டிச்சுவராகிப் போனதோ, கொள்ளையடித்தார்களோ அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அதேபோல கொள்ளையடிப்பதற்கு தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்றத்தில் இரு அணிகளுக்கு இடையில் போட்டியென்று வந்தால், அந்த நேரத்தில் தி.மு.க. என்ன நிலைப்பாடு என்பதை முடிவுசெய்யும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துவருவதாக சசிகலா குற்றம்சாட்டிவரும் நிலையில், மு.க. ஸ்டாலின் அதனை மறுக்கும் விதமாக இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்