பதவி இல்லாமலே அரசியலில் சசிகலா செல்வாக்கு செலுத்த முடியும்: சுப்ரமணியன் சுவாமி

பதவியில் இருந்துதான் அரசியலில் நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டாலும், பதவி இல்லாமலே சசிகலா அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Subramanian Swamy

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உள்பட அடுத்த 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியுள்ளது.

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, "இந்தியாவைப் பொருத்தவரை, பதவி மூலமாகத்தான் ஒரு தலைவரை அரசியல் தலைவராக ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.

"ஆனால், சசிகலாவைப் பொருத்தவரை, அவர் முதல்வர் பதவிக்கு வர நினைத்தது இந்த சமயத்தில் அவசியமாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் கட்சித் தலைவராக இருந்தாலே போதும். ஆளுங்கட்சியானால், சசிகலாவுக்கும் ஓர் அந்தஸ்து கிடைக்கும் என்றார் சுவாமி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உச்சநீதிமன்றத்திலிருந்து..

"அது சசிகலாவின் உரிமை. அவர் பல ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும் கூட, ஊழல்வாதிகள், சந்தேகப்படுவோர், ஊடகங்கள் சொல்வது, மக்கள் சொல்வது ஆகியவற்றுக்கு ஒரு இடமும் கிடையாது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறதா, சட்டத்தில் தடையில்லையா என்று மட்டுமே பார்ப்பார்கள். அதைப் பார்த்து, அவருக்கு முதலமைச்சராகத் தகுதியிருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவ்வாறு கொடுக்காமல் இருந்தால் அது முறையற்றது," என்றார் சுவாமி.

பன்னீர் செல்வத்தைப் பொருத்தவரை, தான் நிர்பந்தப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அவர், ஏன் முதலிலேயே ஆளுநரிடம் சொல்லவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பினார். தோற்றவர்கள்தான் இந்த மொழியில் பேசுவார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு தண்டனையை ஏற்றுக் கொண்டான். நிர்பந்தம் என்று சொல்ல பன்னீர் செல்வத்துக்கு அதிகாரம் கிடையாது என்றார்.

படத்தின் காப்புரிமை AIADMK

சொத்துக்கள் முடக்கம்

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின்படி அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும், சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் சுவாமி தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கேட்டபோது, " சினிமா, கறுப்புப் பணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அரசியல் நடக்கிறது. அதில் மாற்றம் கொண்டுவர பாஜகவுக்கு தகுதி உண்டு. ஆனால், தமிழக பாஜகவுக்கு அந்தத் தகுதி இல்லை," என்றார் சுவாமி.

ஆர்எஸ்எஸ். விசுவ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங்கம், கிரிஷி சங்கம் ஆகிய அமைப்புக்கள் அனைத்தையும் அழைத்து விவாதிக்க வேண்டும் என்றார் அவர்.

"திராவிட இயக்கத்தின் கொள்கையால், மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியாது. அதற்கு தேசிய உணர்வு வேண்டும். இந்தியாவின் உரிமை முதலில், அதன் பிறகுதான் தமிழ். தமிழ், தமிழ் என்று பைத்தியம் மாதிரி சொல்வதற்கு மதிப்புக் கிடையாது," என்றார் சுப்ரமணியன் சுவாமி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்