கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்கள் நிலை - காவல்துறை விசாரணை

  • 15 பிப்ரவரி 2017

கூவத்தூர் தனியார் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக மதுரை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அளித்த புகாரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

யார் முதல்வராக இருப்பது என்பது தொடர்பாக அ.தி.மு.கவில் ஏற்பட்டிருக்கும் பிரிவினையில், சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட் என்ற தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சரவணன் தான் அந்த விடுதியிலிருந்து மாறுவேடத்தில் தப்பிவந்ததாகக் கூறி, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அவருக்கு ஆதரவளித்தார். மேலும் பலர் அங்கே மனப் புழுக்கத்தில் இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், அங்கு எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவர் அளித்த புகாரில், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது கூவத்தூர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தியாய் தண்டனை சட்ட பிரிவுகள் 342,343,365,353 மற்றும் 506(1) ஆகியற்றின் வழக்கு பதிவாகியுள்ளது என்று பிபிசியிடம் கூவத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆள்கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக ஒரு நபரை தனியாக அடைத்துவைப்பது மற்றும் கொலை மிரட்டல் போன்ற குற்றங்களுக்காக இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி அந்த விடுதியில் விசாரணை நடத்தினார்.

வடக்கு மண்டல ஐ.ஜி., மத்திய மண்டல ஐ.ஜி. ஆகியோரும் அங்கு உள்ளனர். பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் அந்த விடுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அங்கு உள்ள சட்டமன்ற எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதற்கிடையில் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளரான கருப்பசாமி பாண்டியன் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.