`ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லை': அதிமுக எம்.எல்.ஏ. மனக்குமுறல்

  • 17 பிப்ரவரி 2017

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தாங்கள் சுதந்திரமாக இருந்தாலும், ஓ. பன்னீ்ர் செல்வம் ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லையைத் தாங்க முடியவில்லை என்று கோவை அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Golden Bay Resorts
Image caption கோலன்டன் பே விடுதி

கடந்த பத்து நாட்களாக, அந்த நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குச் செல்லும் முன்பு, மூன்று நாட்கள் அங்கு சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா.

அங்கு எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று வியாழக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையிலும், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அங்கு தங்கியிருக்கிறார்கள்.

அதுகுறித்து, அங்கு தங்கியுள்ள கோவை எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனிடம் கேட்டபோது, சனிக்கிழை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் செல்லலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

கடலை ஒட்டி, பரந்து விரிந்த அந்த நட்சத்திர விடுதியில், உடற்பயிற்சி வசதி, நீச்சல் குளம், விளையாடும் இடங்கள் என எல்லா விதமாந வசதிகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Goldenbay resorts

காலையில் சுமார் 8 மணி வரை நடைப்பயிற்சி செய்த பிறகு, சிறது நேரம் நாளிதழ்களைப் படித்துவிட்டு, காலை உணவுக்கு ஒன்று கூடுவதாகக் கூறினார். இங்கு சைவம், அசைவம் என எல்லா வகையான உணவுகளும் கிடைப்பதாகவும், விருந்தோம்பல் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அங்கு எந்தவிதமான உருட்டல், மிரட்டல்களும் இல்லை என்ற அவர், குடும்பத்தினர் சுதந்திரமாக வந்து செல்வதாகவும் தெரிவித்தார். தனது மகனும், மகளும் நேற்று வந்து சென்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆட்சியைக் காப்பாற்றவே இந்த முயற்சி

"அதிமுகவில் உள்கட்சி பூசல் நடக்கிறது. இதைப்பற்றி மக்களுக்கு கவலையில்லை. தாங்கள் ஓட்டுப் போட்ட ஆட்சி நிலையாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நாங்கள் அதைக்காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் தொகுதிக்குச் சென்று மக்களை எதிர்கொள்ள முடியாது. தேர்தல் வந்தால் தேவையில்லாத பண விரயம் ஏற்படும். அதனால், ஆட்சியைக் காப்பாற்றத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரே இடத்தில் இருக்கிறோம். எல்லா வசதிகளும் இங்கு இருக்கும்போது, என்ன பிரச்சனை இருக்கிறது. எதிரணியினர் பரப்பும் பிரசாரம்தான், நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதெல்லாம்," என்றார் அர்ஜுனன்.

படத்தின் காப்புரிமை Goldenbay resorts

"ஆனால், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொலைபேசி மூலம் கொடுக்கும் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அதிகாலை, நள்ளிரவு என நேரம், காலம் இல்லாமல் தொலைபேசி அழைப்பு வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கான அழைப்புக்கள் வருகின்றன. தொகுதியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஓ.பி.எஸ். அணிக்குச் செல்லுங்கள் என்று மிரட்டுகிறார்கள்," என்று ஆதங்கம் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் முடிவு

"பணம் வாங்கிவிட்டீர்களா என்று கேட்டு, காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுகிறார்கள். பெயர் கேட்டால் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். சிலர் இணைய அழைப்புக்கள் வழியாக அழைத்து, வெளிநாட்டில் இருந்து பேசுவதைப் போல காட்டிக் கொள்கிறார்கள். இன்றைக்குக் காலையில் கூட அதுபோன்று அழைப்புக்கள் வந்தன. நீ ஓ.பி.எஸ்.ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு எனக்கு தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறாயா என்று நான் திருப்பிக் கேட்டேன்," என அர்ஜுன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Golden Bay Resorts

இவ்வாறு தொல்லை தரும் அழைப்புக்கள் வந்தாலும், தான் அனைத்து அழைப்புக்களையும் ஏற்பதாகவும், ஏனென்றால், சில நேரங்களில் உண்மையாகவே தொகுதி மக்கள் அழைத்து பிரச்சனைகளைச் சொல்கிறார்கள். நான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன். அதனால், இந்த மிரட்டல்களுக்கு நான் பயப்படுவதில்லை என்று அம்மன் அர்ஜுன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்