மேலும் 500 மதுக்கடைகளை மூட முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

  • 20 பிப்ரவரி 2017

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கூடுதலாக 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு முதல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Wiki

மேலும் மகப்பேறு நிதியுதவியாக வழங்கப்படும் 12 ஆயிரம் ரூபாயை 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கவும், வேலையில்லா இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கவும் மற்றும் மீனவர்களுக்கு தனிவீட்டு வசதி திட்டத்தில் 5,000 வீடுகள் கட்டவும் உத்தரவுகளை பிறப்பிக்கும் கோப்புகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இன்று (திங்கள்கிழமை) மதியம் தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலர் நேரடியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

அப்போது மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும் பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்த பழனிச்சாமி, முதலில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையை, அவருக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தவில்லை.

ஆனால் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா முதல்வர் பொறுப்பு வகித்த போது பயன்படுத்திய அறையை பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உண்ணாவிரத போராட்டம்

சட்டசபையில் ஸ்டாலின் சட்டை கிழிப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்