நகைக்காக கொல்லப்பட்ட மூன்று வயது சிறுமி

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ரேவதி உள்ளிட்டவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பாலியல் வன்முறைக்கு பலியான மூன்று வயது சென்னை சிறுமியின் குடும்பத்தினர்

பட மூலாதாரம், STALIN

சிறுமியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு அவற்றை திருடி அடகு வைத்திருந்தாக, ரேவதி என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அடகு கடையில் இருந்து அந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

இந்த விவாகரத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரித்திகாவின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இந்த சிறுமி நகைக்காக கொலைசெய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்று சென்னை நகர காவல் துறையை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் இந்தக் கொலைவழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ரித்திகாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவின் இந்த ஆட்சி நடைபெற்று வரும் காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, தமிழகத்தில், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய மு.க.ஸ்டாலின், சட்டஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் நிலை தொடர்வதாகவும் குறை கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக காவல்துறை, கூவத்தூர் தனியார் விடுதிக்கு காவல் நிக்க வேண்டிய அவலம் ஏற்பட்ட காரணத்தாலும், இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்து காணப்படுவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சிறுமி கொலை தொடர்பாக விசாரணை நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி எண்ணூர் சுனாமி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

அப்போது காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், மக்களின் பாதுகாப்புக்காக, தங்கள் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்த வேண்டும் என்றும் கோரினார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்