விமானப்படையினர் வெளியேற கோரும் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் உள்ள பிலவுக்குடியிருப்பு காணிகளில் இருந்து விமானப்படையினர் வெளியேற வேண்டும் எனக் கோரி கடந்த மூன்று வாரங்களாகத் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பாடசாலை மாணவர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையாக இன்று காலை ஒரு மணித்தியாலம் வகுப்புக்களைப் புறக்கணித்திருந்தனர்.

விமானப்படையினர் வெளியேற கோறும் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு

அதேவேளை மல்லாவியில் நகர வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணைந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையில் கிளிநொச்சி நகரில் பரவிப்பாய்ஞ்சானில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைமையகம் செயற்பட்டு வந்த பகுதியில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேறக் கோரி இன்று திங்கட்கிழமை காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமது காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும், காணிகளை விடுவிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் சங்கத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கோரி கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மற்றுமொரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாப்பிலவு பகுதியில் பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சக்கள் நடத்தவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.