நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த மனு மீது நாளை விசாரணை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல்செய்த மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

சென்னை உயர் நீதி மன்றம்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பிப்ரவரி 16ஆம் தேதியன்று பதவியேற்றார். அவர் 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டுமென ஆளுனர் வித்யாசாகர் ராவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவை கூடியபோது, பெரும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பை ஒரு வாரத்திற்காவது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தி.மு.கவினர் இந்த அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட அவை, மீண்டும் பிற்பகல் மூன்று மணிக்குக் கூடியபோது தி.மு.கவினர் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பழனிச்சாமி தலைமையிலான அரசு 122 எம்எல்ஏக்களின் ஆதரவோடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், SUNTV

படக்குறிப்பு,

சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஸ்டாலின்

இந்த நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்து தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஸ்டாலின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "கடந்த 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான ஆவணங்களை சபாநாயகரும் சட்டசபைச் செயலரும் திருத்தியுள்ளனர்" என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடந்ததாகச் சொல்ல முடியாது : என்.ராம்

கேட்பொலிக் குறிப்பு,

''வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடந்ததாகச் சொல்ல முடியாது''

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் தனது மனுவில் கோரியுள்ளார்.

படக்குறிப்பு,

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து மெரினாவில் போராட்டம்

அவையில் உள்ள எந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்றாமல், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தமிழக ஆளுனரின் செயலர், தலைமைச் செயலர், இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரி மட்டத்திலான ஒரு அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இதனைச் செய்ய வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரியிருக்கிறார்.

"தங்கள் விருப்பத்திற்கு மாறாக அடைத்துவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள், முதலமைச்சரின் ஆதரவாளர்கள் ஏற்பாடுசெய்திருந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்டு, அவருக்கு ஆதரவாக வாக்களிக்கச்செய்யப்பட்டனர். பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள நடைமுறைகளுக்கு எதிரானது என்பதால், ரகசிய வாக்கெடுப்பும் அந்த வாக்கெடுப்பை ஒரு வாரத்திற்குப் பிறகு நடத்த வேண்டுமென்று சபாநாயகரிடம் தான் கோரினேன். ஆனால், அதற்குப் பதிலாக சபாநாயகர் தி.மு.க. எம்எல்ஏக்களைச் சட்டவிரோதமாக வெளியேற்ற உத்தரவிட்டார்" என ஸ்டாலின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

படக்குறிப்பு,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற போராட்டம்

இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியவுடன். பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பாக முறையிட்ட சண்முகசுந்தரம், இந்த வழக்கை இன்று எடுத்துக்கொள்வதாக நேற்று நீதிமன்றம் கூறியதைச் சுட்டிக்காட்டினார். குறைந்தது, இன்று மதியமாவது இந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென சண்முகசுந்தரம் கூறினார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு நாளை முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

காணொளி: ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - கோவையில் ஆர்ப்பாட்டம்

காணொளிக் குறிப்பு,

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - கோவையில் ஆர்ப்பாட்டம்

மேலும் தகவல்களுக்கு:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்