தர்மபுரி இளவரசனின் மரணம் தற்கொலையே: வழக்கை முடித்தது உயர்நீதிமன்றம்

தர்மபுரியைச் சேர்ந்த தலித் இளைஞரான இளவரசன் தற்கொலை செய்தே இறந்துபோனார் என மாநில குற்றப்பிரிவு சிஐடி காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது.

இளவரசன்

தர்மபுரி மாவட்டம் செல்லக்கொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை, அருகில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்ற தலித் இளைஞர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது. நத்தம்கொட்டாயில் பல வீடுகள் கொளுத்தப்பட்டன. இதற்குப் பிறகு, திவ்யா தன் தாயுடன் வாழ விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, இளவரசனைப் பிரிந்து சென்றார்.

இதற்குப் பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கிடைத்தது.

இளவரசன் தற்கொலை செய்து இறந்து போனதாக காவல்துறை கூறிய நிலையில், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை இளங்கோ வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து, தில்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்களின் அணி இளவரசனின் உடலில் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை அளித்தனர்.

இதற்குப் பிறகு அரூரின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையில், இளவரசன் தனது மனைவி பிரிந்துவிட்ட துயரத்தால், மது அருந்திய நிலையில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இதன் பின்னர், இந்த விவகாரத்தை சிபிசிஐடியிடம் உயர்நீதிமன்றம் ஒப்படைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

அதில், இளவரசனின் நண்பர்களிடம் அவர் கடைசியாகப் பேசியது, அவருடைய கடைசிக் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையிலும், அவர் தொடர்பானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் எனத் தெரியவருவதாக சிபிசிஐடி கூறியிருந்தது.

இதை ஏற்று இந்த வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய இளவரசன் தரப்பு வழக்கறிஞர் ரஜினிகாந்த், "சிபிசிஐடி புதிதாக விசாரணை எதையும் நடத்தவில்லை. காவல்துறையின் விசாரணையையே இவர்கள் ஏற்றுக்கொண்டு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்யப்போகிறோம்" எனக் கூறினார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்