டாடா குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார் சந்திரசேகரன்

டாடா குழுமத்தின் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முக்கிய முதலீட்டு நிறுவனமான ''டாடா சான்ஸ்'' சின் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்.சந்திரசேகரன் இன்று தனது தலைமையில் முதல் முறையாக இயக்குனர்களின் கூட்டத்தை நடத்தினார்.

டாடா சான்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் (இடது)

பட மூலாதாரம், TIRUMALA TIRUPATI

படக்குறிப்பு,

திருப்பதி கோயிலில் டாடா குழுமத்தலைவர் சந்திரசேகரன்

''டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வெற்றிகரமாக தனது ஆளுமையை நிரூபித்த சந்திரசேகரனை வரவேற்கிறேன். இனி வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு நிச்சயமாக ஒரு கணிசமாக மதிப்பை கொண்டுவருவார் என்று நம்புகிறேன்,'' என்றார் டாடா சான்ஸ் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவர் ரத்தன் டாடா .

இயக்குனர்களின் கூட்டத்திற்கு முன்பாக பேசிய சந்திரசேகரன் `` இந்த குழும நிறுவனங்களை மேலும் நெருங்க வைத்து, அதன் மகத்தான கூட்டு வலிமையை பயன்படுத்திக்கொள்வது, டாடா நிறுவனங்களில் தாங்கள்தான் தத்தம் துறைகளில் முன்னோடிகள் என்ற மனப்பாங்கை வலியுறுத்துவது, உலக தரத்திலான செயல்பாடு, மூலதன ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது மற்றும் தம் பங்குதாரர்களுக்கு உயர்ந்த வருமானத்தை வழங்குவது ஆகியவைகளில் கவனம் செலுத்துவேன்'' என்றார்.

டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தற்போது சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2009-2017 வரை இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸசின் தலைமை இயக்குனராக பணியாற்றினார்.

சந்திரசேகரன் முன்னுள்ள சவால்கள்

சந்திரசேகரன் டாடா குழுமத்தின் ஏழாவது தலைவர்.

டாடா குழுமத்தின் இரண்டு பிரதான நிறுவன்ங்களான, ஜாகுவர் லெண்ட்ரோவர் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவைகள் மட்டுமே குழுமத்தின் மொத்த வருவாயில் பாதிக்கு மேல் ஈட்டுகின்றன.

சந்திரசேகரன் எதிர்நோக்கும் முதல் சவால் இந்த இரண்டு நிறுவனங்களின் வெற்றியிலேயே குழும்ம் தங்கியிருப்பதைக் குறைப்பதுதான்.

டாடா எஃகு நிறுவனம் பிரிட்டனில் எதிர்கொண்டுள்ள நஷ்டங்களை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் அதன் எதிர்காலம் பற்றி முடிவு செய்வது அவருக்கு முன்னுள்ள மற்றொரு சவால்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக, புதிய அதிபர் டிரம்ப் எடுத்துவரும் அதி உயர் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்ற முடிவினால் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்வது முக்கியமான மற்றொரு சவாலாக இருக்கும்.

மேலும் கடந்த சில மாதங்களில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரிக்கும் டாடாவுக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான கருத்து வேறுபாடுகளை அடுத்து , டாடா குழுமத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட சேதங்களை சரிக்கட்டுவதும் அவர் முன்னுள்ள பிரச்சனை.

பதவியேற்பதற்கு முன் கடந்த வாரம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வந்தார் சந்திரசேகரன்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்