சசிகலாவுக்கு கட்டில், மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி: சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு, கட்டில், மெத்தை, மின்விசிறி, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

SASIKALA

பட மூலாதாரம், Getty Images

சாதாரண வகுப்பில் இருந்தாலும், சசிகலாவின் கோரிக்கையை ஏற்று சிறை அதிகாரிகள் இந்த வசதியை அளித்துள்ளனர்.

சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இதைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவருக்கு, தரை விரிப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

நான்காயிரம் பேரை அடைக்கும் வசதி கொண்ட பெங்களூர் சிறையில், பெண்கள் பிரிவில் 400 பெண்களை அடைக்க முடியும். தற்போதைய நிலையில், அங்கு 100 பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கீழ் தளத்தில் இரண்டாம் எண் அறையில் அவர் தங்கியுள்ளனர். அதே அறையில்தான் அவரது உறவினர் இளவரசியும் தங்கியிருக்கிறார்.

தொலைபேசியில் யாருடனாவது பேச சசிகலா விரும்பினால், பொதுவான அறையில் வைக்கப்பட்டுள்ள தொலைபேசியிலிருந்து பேசலாம். சிறை அதிகாரிகள் உடனிருப்பார்கள்.

சயனைடு மல்லிகா மாற்றம்

அந்த சிறையில், சயனைடு மல்லிகா என்று அழைக்கப்படும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இருப்பதால் சசிகலாவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவர் வேறு பெல்காமில் உள்ள ஹின்டால்கோ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான், அவர் இந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அனுமதி மறுப்பு

இதற்கிடையில், சசிகலாவைக் காண வந்த அதிமுக பெண் நிர்வாகிகள் கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி மற்றும் வளர்மதி ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன் அனுமதியின்றி பார்க்க வந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திங்கட்கிழமையன்று, அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் மட்டும் வந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.

புழல் சிறைக்கு மாற்றமா?

அதே நேரத்தில், சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய முயற்சிகள் ஏதும் இல்லை என்று சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மாற்றினால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால், சசிகலா பெங்களூரில் இருப்பதே நல்லது என்ற கருத்தும் சசிகலா தரப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஓ. பன்னீர் செல்வம் தரப்பில், சசிகலா அதிமுக பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் சசிகலாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதுதொடர்பான நோட்டீஸை, பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர்கள் சிறைக்கு வந்து, சசிகலாவிடம் வழங்குவதற்காக அதிகாரிகளிடம் வழங்கிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்