இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் திருமணங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் அதிகப்படியாக செலவு செய்து நடத்தப்படும் திருமணங்களுக்கு தடை விதித்து அங்குள்ள அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணப்பெண்ணின் பெற்றோர் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்களை அழைக்க முடியாது. அதே போல், மணமகன் தரப்பினர் 400 விருந்தினர்களை மட்டுமே அதிகபட்சம் திருமணத்திற்கு அழைக்க முடியும்.

மேலும், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் பொருட்டு திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு அதிகபட்சம் ஏழு முக்கிய உணவு வகைகள் மட்டுமே பரிமாற வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக பணச்செலவில் நடைபெறும் திருமணங்களை தடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதே போன்ற தடை உத்தரவை இந்தியா முழுக்க அமல்படுத்த வேண்டும் என்று மசோதா ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.

காஷ்மிரீல் திருமணங்களுக்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாகும்.

மேலும், உள்ளூரில் வாஸ்வான் எனப்படும் பாரம்பரிய விருந்து முறையில் சைவம் மற்றும் அசைவம் என பல வகையான உணவுகள் இடம்பெறும்.

ஏப்ரல் 1 முதல் இந்த தடை உத்தரவு அமலாகும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு,

திருமணங்களில் பாரம்பரிய உணவு வகைகள் காஷ்மீரில் மிகவும் பிரபலம்

பணத்தை வீணாக செலவழிப்பது, உணவு வீணாவது மற்றும் ஊடுருவும் சத்தம் போன்ற பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்த நிலையில் அதற்கு பதில் நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டில் இதே போன்று ஓர் தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதனை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக தடை உத்தரவு விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பிற பகுதிகளிலும் திருமணங்கள் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

உணவு, ஆடைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக பலர் தேவையின்றி அளவுக்கதிமாக செலவு செய்வார்கள் .

கடந்த நவம்பர் மாதம், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், தொழிலதிபருமான ஜனர்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ஐந்து தினங்களுக்கு நடைபெற்றது.

அத்திருமணத்தின் மொத்த செலவு 500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது.

ஒருபுறம் இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் திண்டாடிக் கொண்டிருந்த நிலையில், ரெட்டி வீட்டு திருமணம் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்