பினாமி ஆட்சியை அகற்றுவோம் : திருச்சி போராட்டத்தில் மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி அரசை `பினாமி ஆட்சி` என்று வர்ணித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலி, இந்த பினாமி ஆட்சியை அகற்றவதற்குத்தான் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் என்று திருச்சியில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விதம், ஜனநாயக விரோதமானது என்று கூறி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டம், தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அதற்கு தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், மன்னார்குடி மக்களின் வேண்டுகோளின்படி "மாபியா கும்பல்" என்று மட்டுமே அழைப்போம் என்றும், மன்னார்குடிக்கென ஒரு பாரம்பரியம் உள்ளது அதற்கு நாம் மதிப்பளிப்போம் என்றும் கூறினார்.

கட்சி எல்லையைத் தாண்டி இந்த போராட்டத்திற்கு மக்கள் தமிழகமெங்கும் ஆதரவளித்துள்ளனர் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், ஜெயலலிதா முதல்வராகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்றும், இந்த குற்றவாளி பினாமி ஆட்சியாளர்களுக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் 1.1 சதவீதமே வித்தியாசம் என்றும், தில்லுமுல்லு, தேர்தல் ஆணையம், காவல்துறை கெடுபிடிகளை தாண்டி இந்த அளவு வெற்றி பெற்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்