சட்டசபையில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க நினைத்தார் ஸ்டாலின் : டி.டி.வி தினகரன்
சட்டசபையில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க நினைத்தார் என்று மு.க.ஸ்டாலின் மீது அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பின் போது குற்றஞ்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 15 ஆம் தேதி டி.டி.வி தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர் கட்சியின் துணை பொதுச் செயலாளராக அதிகாரபூர்வமாக பதவியேற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், சபாநாயகர் சட்டசபை விதிகளுக்கு உட்பட்டுத்தான் சபையை நடத்தியதாகவும், மு.க.ஸ்டாலின் சபையில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க நினைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஸ்டாலின் நினைத்தது நடக்காதததால் தோல்வியின் விரக்தியில்தான் தற்போது எதேதோ செய்து கொண்டிருப்பதாக கூறிய தினகரன், அதற்காகத்தான் அவர் தில்லி சென்றுள்ளார் என்றும், ஆனால் அவருடைய முயற்சிகள் தோல்வியில்தான் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது பற்றி கருத்து கூறிய தினகரன், ''எத்தனையோ துரோகிகளை அ.தி.மு.க பார்த்துள்ளது என்றும், சில புல்லுருவிகளின் செயல்பாடு இந்த மாபெரும் வெற்றிக்கோட்டையை எந்த விதத்திலும் பாதிக்காது'' , என்றும் கூறியுள்ளார்.
பின்னர், அ.தி.மு.கவிலிருந்து ஓ.பி.எஸ் அணிக்கு சென்றவர்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், சிலர் தாய் கழகத்திலிருந்து வழி தவறி சென்றிருக்கிறார்கள் அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்ப வருவார்கள் என்றார்.
இதனிடையே, நாளை காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் வரும் நிலையில், அந்த பிறந்தநாளை கட்சித் தொண்டர்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்தியது : சசிகலா
இதுகுறித்து அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு சோதனை மிகுந்ததாக அமைந்துள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்தியது : சசிகலா
எதிரிகளும், துரோகிகளும் அ.தி.மு.கவை வீழ்த்த நினைத்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆன்மா தன்னை வழிநடத்தியதாக அதில் குறிப்பிட்ட சசிகலா, ஏழைகளுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து சசிகலாவிடமிருந்து வரும் முதல் அறிக்கை இதுவாகும்.
நலத்திட்ட உதவிகளுக்கு தயாராகும் ஓ.பி.எஸ் அணி
ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களும் தமிழகம் முழுக்க கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கடந்த 19 ஆம் தேதியே மதுசூதனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்திடுமாறு அ.தி.மு.கவில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
பட மூலாதாரம், FACEBOOK
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்