ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டம் குறித்து மத்திய அரசின் கண்காணிப்புடன் நீதி விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

ஓ. பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தினகரன் போன்றோரை கட்சியில் சேர்த்து பதவி அளித்தது செல்லாது : ஓ. பன்னீர்செல்வம்

முதல்வரின் மரணம் குறித்து பரவலான சந்தேகம் இருப்பதாகவும், அதைத் தீர்க்க விசாரணை ஆணையம் தேவையென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டுமெனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவிவகிப்பது செல்லாது என்றும் எல்லா அடிப்படை உறுப்பினர்களாலும் புதிய பொதுச் செயலாளர் தேர்வுசெய்யப்படும் வரை, மறைந்த ஜெயலலிதாதான் பொதுச் செயலாளர் என்றும் கூறினார்.

ஆகவே, தினகரன் போன்றோரை கட்சியில் சேர்த்து பதவி அளித்ததும் செல்லாது என்று பன்னீர்செல்வம் கூறினார்.

2011ல் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, பிறகு சசிகலாவை மட்டுமே கட்சியில் சேர்த்துக்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய பன்னீர்செல்வம், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் திரும்ப வந்தால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கூறியது குறித்துக் கேட்டபோது, ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினராகக்கூட சேர்க்கப்படாதவர் எப்படி தங்களைப் பற்றி இப்படி கூறமுடியும் என்று கேட்டார்.

தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும் விரைவில் கட்சி அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் நேற்று தெரிவித்த கருத்துகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென்றும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்