`உலகின் மிக மலிவு விலை` ஸ்மார்ட்போன் விவகாரத்தில், நிறுவனத்தலைவர் கைது

உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போனை விற்பதாக கூறிய ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் இயக்குனர் மோஹித் கோயல் மோசடி செய்ததான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோஹித் கோயல்
படக்குறிப்பு,

மோஹித் கோயல்

ஒரு ஸ்மார்ட்போன் முகவர், பணம் செலுத்திய பிறகும், தனக்கு ஸ்மார்ட்போன்கள் வந்து சேரவில்லை என்று கூறியதை அடுத்து மோஹித் கோயல் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 2016ல் பிரீடம் 251 (Freedom 251) என்ற ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் வெறும் ரூ.251க்கு (3.70 டாலர்கள், மூன்று பவுண்ட்கள்) முன் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் பல நுகர்வோர்கள் போன்களை பெற்றபோதும், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், போன்களைக் கேட்டு பணம் கொடுத்த எல்லோருக்கும் போன்களைத் தரவில்லை என்று அந்த நிறுவனத்தின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

வெறும் 3.60 டாலர்களுக்கு கிடைக்கும் இந்திய ஸ்மார்ட்போன் உண்மையில் நல்ல ஸ்மார்ட்போன் தானா?

கோயல் தனக்கு விற்பனை உரிமையைத் தந்ததை அடுத்து, அயம் என்டர்ப்ரைஸஸ் என்ற ஒரு விற்பனை நிறுவனம் இந்திய மதிப்பில்மூன்று மில்லியன் ரூபாய்களை (45,000 டாலர்கள்; 35,800 பவுண்ட்கள்) அவரது நிறுவனத்திற்கு கொடுத்தது.

ஆனால் இது வரை 1.4 மில்லியன் ரூபாய் மதிப்பிற்கான கருவிகள் மட்டும் தான் தரப்பட்டுள்ளது என்றும் மீதப் பணத்தைத் திரும்ப கேட்டபோது அயம் என்டர்ப்ரைஸ்சஸ் நிறுவன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் காவல் துறை செய்தி தொடர்பாளர் ராகுல் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

நாட்டின் மற்ற இடங்களில் இருந்தும் அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் தீர விசாரிப்போம் என்றும், அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை இது போன்ற மோசடிகளில் இழக்கின்றனர், இது போன்ற மோசடிகளை வெளிப்படுத்துவது முக்கியம் ,'' என்றும் அவர் கூறினார்.

''இது போன்ற தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. இது போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் மக்கள் யோசித்து முடிவெடுக்குமாறு நங்கள் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார் .

`போன்ஸி` திட்டம்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் அளிக்கப்படும் என்று உறுதி கூறி பணத்தை பெற தொடங்கியது.

மலிவான போன் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் விற்கப்படுகிறது என்பதால், ஏராளமானோர் அந்த இணையதளத்தை அணுக முயன்றதில், அது செயல் இழந்தது.

பிரதமர் நரேந்திர மோதியால் அதிக கவனம் கொடுக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் இந்த போன் தயாரிக்கப்படுகிறது என்று மோஹித் கோயல் அறிமுக விழாவில் தெரிவித்தார்.

மிக குறைந்த விலையில் எவ்வாறு போன் அளிக்கமுடிகிறது என்று பல கேள்விகள் எழுந்தன. பல ஆய்வாளர்கள் இந்த போன் திட்டத்தை ஒரு "போன்ஸி திட்டம்" ( செயல்படுத்த முடியாத திட்டம் ஒன்றில், முதலில் முதலீடு செய்பவர்களுக்கு , பின்னர் முதலீடு செய்பவர்களின் பணத்தில் இருந்து லாபம் தரும் மோசடித் திட்டம்) என்று வர்ணித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்