புதிய அமைப்பைத் துவங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவங்கியிருக்கிறார். இதற்கென புதிய கட்சி ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தபோது, அவரைப் பார்ப்பதற்கு தன்னை அனுமதிக்கவில்லையென தீபா கூறிவந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.வினர் சிலர் தீபாவை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று புதிய அமைப்பைத் துவங்கப்போவதாக அறிவித்த தீபா, அதன்படி இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கொடியில், கறுப்பு - சிவப்பு வண்ணத்தோடு நடுவில் எம்ஜிஆர் - ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.

சென்னையில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதா விட்டுச் சென்றப் பணிகளைத் தொடர்வதற்காக இந்த அமைப்பைத் துவங்கியிருப்பதாக தெரிவித்தார்.

அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் தங்கள் தலைவர்களின் பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில், தன் பெயரிலேயே கட்சி ஆரம்பித்திருப்பது ஏன் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அந்தத் தலைவர்களின் வழியில் தான் நடப்பதால் அம்மாதிரி பெயரில் கட்சி ஆரம்பித்திருப்பதாக கூறினார்.

ஆர்.கே நகரில் போட்டி

ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்த ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் தான் போட்டியிடப்போவதாகவும் தீபா தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

சசிகலா என்ன மக்கள் பணி செய்தார் எனக் கேள்வியெழுப்பிய தீபா, ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வமும் தானும் தனித்தனியேதான் பணியாற்றுவோம் என்றும் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் அவரது ஆதரவைக் கேட்கப்போவதில்லை என்றும் தீபா தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் மீட்கப்படும்

இந்த அமைப்புக்குத் தான் பொருளாளர் என்றும் பிற நிர்வாகிகள் பிறகு அறிவிக்கப்படுவார்கள் என்றும் தீபா தெரிவித்தார்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்பேன் என்று தீபா கூறியபோது, புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து எப்படி அந்தச் சின்னத்தை மீட்க முடியும் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது ஜெயலலிதாவின் உண்மைத் தொணடர்கள் தன் பின்னால் இருப்பதாகத் தெரிவித்தார்.

அபராதம் கட்ட பணம் இல்லை

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 100 கோடி ரூபாய் அபராதத்தை தான் கடன் வாங்கிக் கட்டுவேன் என அவரது சகோதரர் தீபக் கூறியிருந்தார். அதுபோல, நீங்களும் அந்த அபராதத்தை செலுத்த முன்வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றும், பிறகு அது குறித்து கருத்துத் தெரிவிப்பேன் என்றும் தீபா கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்