ஜம்முவில் குடியேறிய ரோஹிஞ்சா இன முஸ்லிம்களின் துயரம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு நகரின் புறநகர் பகுதியில் ஆசிரியராக பணியாற்றிவரும் 36 வயது முகமது யூசுஃப் மியான்மரிலிருந்து குடிபெயர்ந்த ஒரு ரோஹுஞ்சா முஸ்லிம்.
நர்வாலா பாலா என்ற கோவில் நகரில் கடந்த 11 வருடங்களாக வாழும் இவர், இதுவரை பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்ததில்லை.
ஆனால் ரோஹிஞ்சாக்கள் "ஜம்முவைவிட்டு வெளியேற வேண்டும்" என்ற பதாகையை கண்டதிலிருந்து யூசுஃப் தனது எதிர்காலத்தை நினைத்து கவலை அடைந்துள்ளார்.
குறிப்பாக, கடந்த மாதம் காலாவதியான தனது அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையத்தின் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பது அவரது கவலையை மேலும் அதிரித்துள்ளது.
அந்த பலகைகள் உள்ளூர் அரசியல் கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சியால் வைக்கப்பட்டுள்ளது; மேலும் "டோக்ரா இனத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க ஜம்மு மக்கள் ஒன்றுபட வேண்டும்" என அந்த பதாகையில் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் இந்த பகுதியில் டோக்ரா இனம், முக்கிய இந்து சமுதாயம் ஆகும்.
"திடீரென்று எங்களை வெளியேற்ற குரல் எழுப்புவது எதனால் என்பது தெரியவில்லை. உள்ளூர் அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாங்கள் குற்றம் செய்ய வரவில்லை; எங்கள் தலையெழுத்து எங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. எங்களை பாதுகாப்பதற்கும் உயிரோடு வந்திருப்பதற்காகவும் எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்". என யூசுஃப் தெரிவித்தார்.
ஜம்முவில் உள்ள பெரும்பாலான ரோஹிஞ்சா இன மக்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு தினக் கூலி வேலைகளை செய்கின்றனர்; மறுசுழற்சி பொருட்களை சேகரித்தும், அதனை விற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்கு உதவுகின்றனர்; சில பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர் மற்றும் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.
"நான் ஜம்முவில் இரண்டு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். நான் கூலி வேலை செய்து வாழ்வை நடத்தி வருகிறேன்; எனது வாழ்விற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாததால் நான் பாதுகாப்பாக உணர்ந்து வந்தேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக ரோஹிஞ்சா இன முஸ்லிம் மக்களை பற்றிய பேச்சுகள் வருகின்றன. ஜம்முவை விட்டு வெளியேறு" அல்லது நாங்கள் வெளியே அனுப்புவோம் என்று உள்ளூர் அரசியல் கட்சிகள் பதாகைகளை வைத்து வருகின்றனர் என்பதை நான் கேள்விப்பட்டேன்" என மியான்மரிலிருந்து வந்த மற்றொரு அகதியான, அஜஸ் உல் ஹக் தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் இங்கு சட்டவிரோதமாக தங்கவில்லை. அகதிகளுக்கான ஐ.நா., உயர் ஆணையம் எங்களுக்கு அனுமதி அட்டைகளை வழங்கியுள்ளது. நாங்கள் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளையும் உருவாக்கவில்லை. எந்த உள்ளூர்வாசிகளுக்கும் நாங்கள் அச்சுறுத்தலை தரவில்லை. நாங்கள் குற்றவாளிகளும் இல்லை." என ஹக் தெரிவித்தார்.ரோஹிஞ்சாக்களை வெளியேற்ற காரணம் இல்லாமையால் அரசியல்வாதிகள் வெறும் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என சிலர் கருதுகின்றனர்.
"இந்த வெறுப்பு பிரசாரம் தொடங்கியதிலிருந்து எந்த ஒரு போலிஸும் எங்கள் பகுதிக்கு வந்து எங்களை சந்திக்கவில்லை; புதிய பதிவுகளுக்கு ஆணைகளும் வழங்கப்படவில்லை" என மற்றோரு ஆசிரியர் கிஃபயத் உல்லா தெரிவிக்கிறார்.
தீவிரவாத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாநிலத்தில், ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வருகை, பாதுகாப்புப் படையினருக்கு இன்னொரு கவலையளிக்கும் விடயமாக மாறும் சாத்தியக்கூறு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு வெளியூர் தீவிரவாதிகளில் கொல்லப்பட்ட ஒருவர், மியான்மரிலிருந்து வந்தவர் என்பது தெரியவந்ததில் இருந்து பதற்றம் தொடங்கியது; ஆனால் அந்த மனிதர் ஜம்முவில் வசித்தவரா என்பது தெளிவாக தெரியவில்லை.
மாநிலத்தின் கடும்போக்கு இந்து அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் ரோஹிஞ்சா பிரச்சனையை கையில் எடுத்துள்ளது; பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக "ரோஹிஞ்சா மக்கள் மாநிலத்தைவிட்டு துரத்தப்பட வேண்டும்" என்று வலுயுறுத்துகிறது.
மேலும் சில அரசியல்வாதிகள், பல பயங்கரவாத சம்பவங்களை அகதிகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்
ஜம்மு காஷ்மீரின் தேசிய பாந்தர் கட்சியின் தலைவர் ஹர்ஷ் தேவ் சிங், "இந்த மாநிலத்தின் சட்டம் எந்த பகுதியிலாவது ரோஹிஞ்சா இன மக்கள் புலம் பெயர்பெறுவதை அனுமதிக்கிறதா? என கேள்வி எழுப்புகிறார்.
"இந்திய அரசியலைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் தனி அதிகாரத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 -ன்படி ஜம்மு காஷ்மீரில் யாரும் குடியேற அனுமதியில்லை" என்று தெரிவித்தார்.
"மாநில அரசு அவர்களை வெளியேற்றவில்லை என்றால் நாங்கள் அதை செய்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது, பாகிஸ்தானிலிருந்து தப்பிவந்த இந்து மற்றும் சீக்கிய மக்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் உரிமை குறித்த பிரச்சனையை கிளப்பியுள்ளது.
1947 ஆம் ஆண்டு இந்தியா பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானின் மேற்கு பகுதியிலிருந்து 19,000 குடும்பங்கள் இந்த மாநிலத்தில் குடியேறியுள்ளனர்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட போதிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடியேறிகளாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நாள் வரையில் மாநில தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ரோஹிஞ்சா இன மக்கள் இங்கு வாழ அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அகதிகளுக்கு மூன்று தலைமுறைகளை கடந்த பின்னும் ஏன் முழு குடியுரிமை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சையை சில அரசியல்வாதிகள் கிளப்பியுள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு வகிக்கும் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் மெகபூபா முஃப்தி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 5,740க்கும் மேலான பர்மிய ரோஹிஞ்சா மக்கள் குறித்து எந்த ஒரு தீவிரவாத செயல்களும் பதியப்படவில்லை என தெரிவித்தார்.
"எந்த ரோஹிஞ்சா இன மக்களும் தீவிரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. இருப்பினும் ரோஹிஞ்சா இன மக்களில் 38 பேர் மீது 17 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன" என சட்டசபையில் பாரதீய ஜனதா அரசியல்வாதிகளின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஜம்முவில் உள்ள பெரும்பாலான ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள், அவர்கள் குறித்து உள்ளூர் மக்கள் எந்தவித புகாரையும் பதியவில்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும் ரோஹிஞ்சா இன மக்கள் பல நற்காரியங்களில் ஈடுபடுவதாகவும் கடந்த வருடம் தீ விபத்து ஒன்றில் குழந்தைகளை மீட்க முன் வந்ததாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் ரோஹிஞ்சா மக்கள் பிரச்சனையை ஜம்மு மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து அரசாங்கத்தை தாக்க எதிர்கட்சிகள் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தும் சூழலை இந்தக் கருத்துக்கள் தடுக்கப்போவதில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்