ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதி கிராம மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டார்கள்.

கோப்புப் படம்
படக்குறிப்பு,

கோப்புப் படம்

11-ஆவது நாளாக தொடரும் இந்த தொடர் போராட்டத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முதல், கிராம மக்கள் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கிராம மக்களை போலவே இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல்வேறு தரப்பு மக்கள் புதுக்கோட்டை நகரில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை இருசக்கர வாகனத்தில் நெடுவாசல் வரை பேரணி செல்லப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.

காரைக்கால் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது போல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.

படக்குறிப்பு,

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம்: நாராயணசாமி

அரசியல் காரணங்களுக்காக சிறப்பு சட்டமன்ற கூட்டங்களை கூட்டும் தமிழக அரசு, இது போன்ற மக்கள் பிரச்சனைக்காக அவசர நடவடிக்கைகளை எடுக்க தவறுவது ஏன் எனவும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் தேடல் ஆய்வு மற்றும் பிரித்தெடுத்தல் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொது மக்கள், இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் என கூறுகின்றனர்.

வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் என அச்சம் வெளியிடும் இந்த நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக, தமிழக மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

இதற்கிடையே இந்த நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக மோட்டார் வானங்களில் பேரணியாக கிளம்பியவர்களை திருச்சி விமான நிலையம் அருகே திருச்சி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

காவல்துறையின் அனுமதி பெறாமல் பேரணிகளை நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்துக்கு திரையுலகினர் ஆதரவு

திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்." என குறிப்பிட்டுள்ளார்.

படக்குறிப்பு,

கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் செய்தி

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவான கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

தங்கர்பச்சான் போன்ற வேறு சில திரையுலக பிரபலங்களும், இந்த போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்