பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணத்தில் மர்மமுள்ளது என ஓபிஎஸ் பேசுகிறார்: மு. க. ஸ்டாலின் சாடல்

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்ததற்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

'பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணத்தில் மர்மமுள்ளது என்கிறார் ஓபிஎஸ்'
படக்குறிப்பு,

'பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணத்தில் மர்மமுள்ளது என்கிறார் ஓபிஎஸ்'

இது குறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' சொத்து குவிப்பு வழக்கில் இந்தியாவின் நீதித்தலைமை அளித்துள்ள தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கின்ற இளையதலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்டாலின் இது குறித்து கூறுகையில், ''இப்படிப்பட்ட நிலையில்தான், ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு சார்பில் அவர் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி விளம்பரங்கள் அளிக்கக்கூடாது என்றும், அவர் பெயரில் அமைந்துள்ள அரசு திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை அளித்தேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கேட்பொலிக் குறிப்பு,

அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற முடியுமா?

'ஜெயலலிதாவை பாராட்டி பேசினேன்'

''இந்நிலையில் இதற்காக என் மீது விமர்சனக் கணை தொடுத்திருக்கும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், முதல்வராக அவர் பதவியிலிருந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அம்மையார் ஜெயலலிதாவின் இயல்பைப் பாராட்டிப் பேசியவன்தான் நான். ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொள்வதே பெருங்குற்றம் என்கிற அரசியல் தீண்டாமையை கடைப்பிடிக்கிற இயக்கம் திமுக அல்ல'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக என்ற கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவேதா, அவருடைய படங்களைப் பயன்படுத்துவதோ அவர்களின் உரிமையைச் சார்ந்தது. அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவோ, விமர்சிக்கவோ இல்லை. ஆனால், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதையும், அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவர் என சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதே அரசுப் பணத்தில் விளம்பரங்கள் தருவதும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை அவர் பெயரில் நடைமுறைப் படுத்துவதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும் என்பதைத்தான் திமுக வலியுறுத்துகிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சியில் இருந்த போது ஏன் கேள்வி எழுப்பவில்லை?

அரசின் சார்பில் அவரது பெயரும் படமும் இடம்பெறுவது சட்ட விரோதமானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானதுமாகும் என்று கோரிய ஸ்டாலின், இதனைச் சுட்டிக்காட்டினால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசியல் சுயநலத்திற்காக என் மீது கண்டனக்கணை தொடுக்கிறார். ஜெயலலிதா அம்மையார் மீதான அவரது விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு நான்தானா கிடைத்தேன்? இப்போது ஜெயலலிதா மீது இத்தனை அக்கறை காட்டும் திரு.ஓ.பி.எஸ் அவர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் மனதில் உள்ள ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்த சந்தேகம் பற்றி எப்போது பேசினார்? என்று ஸ்டாலின் வினா எழுப்பினார்.

''பதவியைப் பறித்துக் கொண்டார்கள் என்றதும், ஜெயலலிதா அம்மையாரின் சமாதியில் ஊடக வெளிச்சத்துடன் தியானம் இருந்து, திடீர் ஞானோதயம் பெற்ற பிறகே, அதாவது ஜெயலலிதா அம்மையார் மரணமடைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து, பதவி சுகத்தை அனுபவிக்க இயலாமல் போனபிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவர் திரு ஓ.பி.எஸ் அவர்கள். முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அவர் செய்த ஏற்பாடுகள் என்ன?'' என்று ஸ்டாலின் மேலும் வினா எழுப்பினார்.

பதவி கிடைக்கும் என்றால் தனக்கு முதன்முதலாக பதவி வழங்கியவரையே மறந்துவிடுவதும், பதவி போனபிறகு அரசியல் நடத்த வேறெதுவும் கிடைக்காவிட்டால், மறந்து போன ஜெயலலிதாவின் படத்தையும் அவரது சமாதியையும் திடீரென பயன்படுத்துவதும் ஓ.பி.எஸ் போன்ற அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழக்கமாகிவிட்டது என்று மு. க. ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்