நம்பிக்கை இல்லா தீர்மானம்: தமிழக முதல்வர் உள்ளிட்ட மூவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், முதலமைச்சர், சட்டமன்ற செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமேஷ் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக இன்று திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஒன்றிணைத்து நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், சட்டமன்ற நிகழ்வுகளின் அதிகாரபூர்வ வீடியோ பதிவை வெளியிடவும் இன்று கோரப்பட்டது.

குறிப்பாக திமுக தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடியபோது, ஏற்கனவே அதிகாரபூர்வ வீடியோ பதிவை தங்களுக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்ற சபாநாயகரிடம் கோரியதாக குறிப்பிட்டார்.

மேலும் உண்மையை மறைக்கவே வீடியோ பதிவு மறைக்கப்படுவதாகவும் கூறிய சண்முகசுந்தரம், இந்த விவாகரத்தில் அவசரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் தலைமையிலான அந்த அமர்வு, சட்டமன்ற வீடியோ பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

அத்தோடு தமிழக முதலமைச்சர், சட்டமன்ற செயலர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்