ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை: பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

எரிவாயுப்பணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோகார்பன் என்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந் நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கம். இதன் ஆய்வு மற்றும் துரப்பணப் பணிகள், சர்வதேச விதிமுறைகளின்படி ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மூன்று பகுதிகளில் சுமார் 1461 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோகார்பன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 31 சுரங்க ஒப்பந்தங்களின் மூலம் தமிழகத்தில் தினசரி 600 டன் எண்ணெய் மற்றும் 30 லட்சம் டன் கன மீட்டர் இயற்கை வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை, 700-க்கும் மேற்பட்ட சிறு எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால், அருகிலுள்ள விவசாயப் பணிகள் பாதிக்கப்படவில்லை. உயிர்களுக்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் அல்லது சுகாதார அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மற்றும் தமிழகத்தில் உள்ள நெடுவாசல் ஆகிய இரு இடங்களிலும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் அதற்கு இணையான இயற்கை வாயு இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறுகிறது.

இந்தப் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆய்வுப் பணியால் விவசாயம் மற்றும் மண்ணின் தன்மை மீது ஏற்படும் தாக்கம் குறித்தும், மீத்தேன் வாயு எடுப்பதால் நிலத்தடி நீர் மாசடையும் என்றும் கடந்த சில வாரங்களாக கவலைகள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அதே நேரத்தில், இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் கருத்தில் கொள்ளப்படுவதாகவும், அதுதொடர்பான ஆய்வும் நடத்தப்படுவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

எண்ணெய் அல்லது வாயுக்காக துளையிடுதல் மற்றும் உற்பத்திப் பணிக்கு 120க்கு 120 சதுர மீட்டர் என்ற அளவிலேயே நிலம் தேவைப்படுவதாகவும், அது விவசாயத்தையோ அல்லது மண்ணின் தன்மையையோ பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிலத்தில் சுமார் ஆயிரம் மீட்டரிலிருந்து எடுக்கப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. சர்வதேச அளவில் இதுபோன்ற எண்ணெய், வாயு உற்பத்திக்காக உளக அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், இயற்கை வாயுவின் பிரதான பகுதியான மீத்தேன், உலக அளவில் வீட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அருகிலுள்ள பகுதிகளிலும், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், பெட்ரோலிய உற்பத்தி தொடர்பான அனைத்துப் பணிகளும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதில், மக்கள் கருத்தறியும் நடவடிக்கையும் ஓர் அம்சம் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட இந்த சிறு எண்ணெய் கிணறுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தி துவங்கும் என்றும், ஹைட்ரோ கார்பன் உற்பத்தியால் மாநில மக்களுக்கு பெருமளவு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஒப்பந்தங்களின் மூலம் 300 கோடி ரூபாய் வருமானம், மாநில அரசுக்கு உரிமத் தொகையாக 40 கோடி ரூபாய் வருமானம், 500 பேருக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும் என்று பெட்ரோலிய அமைச்சகம் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்