ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அமைச்சகத்தின் விளக்கத்தை மீறியும் தொடரும் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியத்துறை விளக்கமளித்த நிலையிலும், புதுக்கோட்டை நெடுவாசலில் அந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடத் தயாராக இல்லை.இன்றும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மத்திய அரசின் சமரசத்தை ஏற்கப்போவதில்லை என கூறும் போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அரசு இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்..

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், மக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

அது குறித்து அப்போது பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இப்பகுதியில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முயற்சிக்கான முன்னேற்பாடுதான் ஹைட்ரோகார்பன் திட்டம் என கூறினார்.

Image caption தொல் திருமாவளவன்

இதற்கிடையே ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள், தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு, இப்பிரச்சனையை, ஜல்லிக்கட்டு பிரச்சனையை போல, மீனவர் பிரச்சனையை போல வளர விடும் தனது வாடிக்கையான நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.

மாணவ அமைப்பினரும் இப்போராட்டத்தை கைவிட போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்